செய்திகள்
நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழு

200 நாடுகளுக்கு பரவியது கொரோனா- 38 ஆயிரத்தை நெருங்கியது பலி எண்ணிக்கை

Published On 2020-03-31 02:44 GMT   |   Update On 2020-03-31 02:44 GMT
உலகின் 200 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில், இந்த வைரசுக்கு பலியானோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
ஜெனிவா:

சீனாவின் வுகான் நகரில் இருந்து வெளிப்பட்ட உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. தற்போது வரை உலகின் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகின்றனர். 

இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 7 லட்சத்து 85 ஆயிரத்து 715 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 37 ஆயிரத்து 814 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 5 லட்சத்து 82 ஆயிரத்து 295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 29 ஆயிரத்து 488 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 606 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இத்தாலியில் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இத்தாலியில் 11 ஆயிரத்து 591 பேர் பலியாகி உள்ளனர். அதற்குஅடுத்த இடங்களில் ஸ்பெயின் (7716 பலி), சீனா (3305 பலி) ஆகிய நாடுகள் உள்ளன. அமெரிக்காவில் 3164 பேரும், பிரான்சில் 3024 பேரும், ஈரானில் 2757 பேரும், பிரிட்டனில் 1408 பேரும் உயிரிழந்துள்ளனர். 
Tags:    

Similar News