செய்திகள்
ராஜபக்சே

போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தில் இருந்து இலங்கை வெளியேறியது

Published On 2020-02-27 05:07 GMT   |   Update On 2020-02-27 05:07 GMT
போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மான ஆதரவில் இருந்து இலங்கை வெளியேறியது.
ஜெனீவா:

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிக்கட்ட சண்டை நடந்தது. அப்போது, 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தன. இதற்கிடையே, ராஜபக்சே ஆட்சி முடிவடைந்து, சிறிசேனா அதிபர் ஆனார். அவரது ஆட்சிக்காலத்தில், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை ஆதரவுடன் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 11 நாடுகள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தன. அதில், இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், போர்க்குற்றத்துக்கு பொறுப்பானவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த தீர்மானம் நிறைவேறியது.

இந்நிலையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இறுதிக்கட்ட போரின்போது, பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபய ராஜபக்சே அதிபர் ஆனார். அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே பிரதமர் ஆனார். ஐ.நா. தீர்மான ஆதரவில் இருந்து இலங்கை வெளியேறும் என்று மகிந்த ராஜபக்சே சமீபத்தில் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக, இந்த முடிவை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. கவுன்சிலின் 43-வது அமர்வு, ஜெனீவா நகரில் நடந்து வருகிறது.

அதில், இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி தினே‌‌ஷ் குணவர்த்தனே பேசியதாவது:-

மனித உரிமை, நல்லிணக்கம், போர்க்குற்ற விசாரணை ஆகியவை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை ஆதரிப்பதில் இருந்து இலங்கை விலகிக் கொள்கிறது. அப்படி விலகியபோதிலும், உள்நாட்டு அளவில் போர்க்குற்ற விசாரணை நடத்த உறுதி பூண்டுள்ளது.

இந்த தீர்மானம், இலங்கையின் இறையாண்மைக்கும், கண்ணியத்துக்கும் விழுந்த அடியாக இருந்தது. உள்நாட்டிலேயே நல்லிணக்க நடவடிக்கைகள் நடந்து வந்த போதிலும், முந்தைய அரசு அதை கண்டுகொள்ளாமல், இந்த தீர்மானத்தை ஆதரித்து விட்டது. இவ்வாறு அவர் பேசினார். ஆனால், இந்த அறிவிப்பை ஏற்காமல், சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் நிர்வாகி ஜான் பி‌‌ஷர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News