செய்திகள்
டெப்ரா மெகன்னா தொலைந்த மோதிரம்

47 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் தொலைந்த மோதிரம் பின்லாந்தில் கிடைத்தது

Published On 2020-02-20 03:34 GMT   |   Update On 2020-02-20 03:34 GMT
அமெரிக்காவின் போர்ட்லாந்து நகரை சேர்ந்த டெப்ரா மெகன்னா என்பவர் 47 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் தொலைத்த மோதிரம் தற்போது கிடைத்தது சொல்லமுடியாத ஆனந்தத்தை தருவதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.
நியூயார்க் :

அமெரிக்காவின் போர்ட்லாந்து நகரை சேர்ந்த பெண் டெப்ரா மெகன்னா (வயது 63). இவர் கடந்த 1973-ம் ஆண்டு பள்ளி பருவத்தின்போது, தனது காதலர் பரிசளித்த மோதிரத்தை தொலைத்தார். எங்கு தேடியும் அந்த மோதிரம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் டெப்ரா மெகன்னாவுக்கு அண்மையில் பார்சல் ஒன்று வந்தது. அதில் 47 ஆண்டுகளுக்கு முன்பு தான் தொலைத்த மோதிரம் இருந்ததை கண்டு அவர் அதிசயித்தார்.

மேலும் அந்த மோதிரம் பின்லாந்து நாட்டில் உள்ள காட்டில் இருந்து கிடைத்ததாக வந்த தகவல் அவருக்கு மேலும் ஆச்சரியத்தை அளித்தது. பின்லாந்து காட்டில் உலோக ஆய்வு செய்தவருக்கு மண்ணுக்கு அடியில் இருந்து இந்த மோதிரம் கிடைத்த நிலையில், அவர் அதை டெப்ரா மெகன்னாவுக்கு அனுப்பியுள்ளார்.

மோதிரத்தில் டெப்ரா படித்த பள்ளியின் பெயர் இருந்ததை வைத்து அவரின் முகவரியை ஆய்வாளர் கண்டுபிடித்து அனுப்பியதும் தெரியவந்தது. தன்னுடைய காதல் கணவர் 3 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் இறந்துவிட்ட நிலையில், 47 ஆண்டு களுக்கு பின் சுமார் 4000 கி.மீ தூரத்தை கடந்து, அவர் கொடுத்த மோதிரம் தன்னிடம் வந்தது சொல்லமுடியாத ஆனந்தத்தை தருவதாக டெப்ரா நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Tags:    

Similar News