செய்திகள்
விஜய் மல்லையா

விஜய் மல்லையா குற்றவாளி என்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் உள்ளன- இந்தியா வாதம்

Published On 2020-02-13 03:50 GMT   |   Update On 2020-02-13 03:50 GMT
வங்கிக் கடன் மோசடியில் விஜய் மல்லையா குற்றவாளி என்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக லண்டன் ஐகோர்ட்டில் இந்தியா தெரிவித்துள்ளது.
லண்டன்:

தொழிலதிபர் விஜய் மல்லையா மீது ரூ.9,000 கோடி வங்கி கடன் மோசடி செய்ததாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், அவர் பிரிட்டன் சென்று அங்கு வாழ்ந்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப லண்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் விஜய் மல்லையா ஜாமீன் பெற்றதுடன், இந்த உத்தரவை எதிர்த்து லண்டன் ஐகோர்ட்டில் அவர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நேற்று ஐகோர்ட்டில் தொடங்கியது. விசாரணையின்போது விஜய் மல்லையா கோர்ட்டில் ஆஜரானார். அப்போது விஜய் மல்லையாவின் வக்கீல், இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற மாஜிஸ்திரேட்டு கோர்ட்டின் உத்தரவில் பல குளறுபடிகள் உள்ளதாகவும் அந்த உத்தரவு முழுமையும் தவறானது என்றும் வாதாடினார்.

அதன்பின்னர் இந்திய அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், கிங்பிணர் விவகாரத்தில் விஜய் மல்லையா மீதான குற்றச்சாட்டுளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். 

2012 ஆம் ஆண்டில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் கடும் சரிவை சந்தித்த விவகாரத்தில், மல்லையா மோசடியில் ஈடுபட்டதற்கு ஏராளமான சான்றுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இன்றும் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
Tags:    

Similar News