செய்திகள்
ஜப்பான் துறைமுகப்பகுதியில் நிறுத்தப்பட்ட சொகுசுக்கப்பல்

ஜப்பானில் நடுக்கடலில் நிறுத்தப்பட்ட சொகுசுக்கப்பலில் 10 பேருக்கு கொரோனா வைரஸ்

Published On 2020-02-05 06:03 GMT   |   Update On 2020-02-05 06:03 GMT
ஜப்பானில் நடுக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசுக்கப்பலில் பயணம் செய்த 10 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டோக்கியோ:

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அந்நாட்டில் மட்டும் இதுவரை 492 பேர் உயிரிழந்துள்ளனர். 24,324 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளதால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவிவருகிறது. 

இந்த நிலையில் கடந்த மாதம் 20-ம் தேதி ஜப்பானில் உள்ள யோகோஹாமா நகரில் இருந்து சீனாவில் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்குக்கு டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் சென்றது.

இந்த கப்பலில் பயணிகள், ஊழியர்கள் உள்பட 3700-க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். இந்த கப்பல் கடந்த 25-ந்தேதி ஹாங்காங் சென்றடைந்தது. அப்போது கப்பலில் பயணம் செய்த ஹாங்காங்கை சேர்ந்த 80 வயது முதியவர் இறங்கினார். அதன் பின்னர் அந்த சொகுசு கப்பல் ஹாங்காங்கில் இருந்து மீண்டும் ஜப்பானுக்கு புறப்பட்டது. 

ஆனால், ஹாங்காங்கில் கப்பலில் இருந்து இறங்கிய 80 வயது முதியவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த 30-ந்தேதி தெரியவந்தது.



இதற்கிடையில், ஹாங்காங் முதியவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து கப்பலில் பயணம் செய்த எஞ்சியவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. 

இதையடுத்து நேற்று ஜப்பான் நாட்டின் யோகோஹாமா நகரில் உள்ள துறைமுகத்திற்கு சொகுசுக்கப்பல் வந்ததையடுத்து அதிகாரிகள் பயணிகள் யாரையும் தரையிறங்க அனுமதிக்கவில்லை. 

இதனால் கப்பல் துறைமுகப்பகுதியை விட்டு வெளியே நடுக்கடலில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த கப்பலில் உள்ள 3,711 பயணிகளிடம் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்ற பரிசோதனை இன்று நடத்தப்பட்டது.

இந்நிலையில், கப்பலில் பயணம் செய்த 10 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது பரிசோதனை முடிவுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து வைரஸ் பாதிக்கப்பட்ட 10 பேரும் கப்பலில் உள்ள தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த சொகுசு கப்பலில் உள்ள பயணிகள் அனைவரும் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர்.   
Tags:    

Similar News