செய்திகள்
மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் உயிரிழப்பு

Published On 2020-01-28 01:11 GMT   |   Update On 2020-01-28 01:11 GMT
அமெரிக்காவில் மதுபான விடுதியில் மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் ஹார்ஸ்வில்லே நகரில் மதுபான விடுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு இளைஞர்கள், முதியவர்கள் என ஏராளமானோர் இந்த மதுபான விடுதிக்கு வந்து மது அருந்தினர். அப்போது அங்கு இசைக்கச்சேரியும் நடந்தது. அனைவரும் மதுபோதையில் இசையை ரசித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மது அருந்தி கொண்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. அனைவரும் அலறிஅடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த மர்ம நபர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டு தள்ளினார்.

இதில் 2 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். அதனை தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். தாக்குதல் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தாக்குதல் நடத்திய நபர் யார், தாக்குதலின் பின்னணி என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. தப்பி ஓடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News