செய்திகள்
கர்ட்னி பிரையல்

டிரம்ப் என்னை முத்தமிட அழைத்தார்: பெண் நிருபர் புகாரால் அதிர்ந்தது அமெரிக்கா

Published On 2020-01-06 02:35 GMT   |   Update On 2020-01-06 03:07 GMT
டிரம்ப் என்னை முத்தமிட அழைத்தார் என்ற புகழ்பெற்ற ‘பாக்ஸ் நியூஸ்’ டி.வி. சேனலில் நிருபராக இருந்த கர்ட்னி பிரையலின் புகாரால் அமெரிக்கா அதிர்ந்து போய் உள்ளது.
வா‌ஷிங்டன் :

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது பல்வேறு பெண்கள் பாலியல் புகார்கள் கூறி உள்ளனர். 2016-ம் ஆண்டு அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் தொடங்கி பல தரப்பிலான பெண்கள் அவர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை பெண்கள் கூறினர்.

இந்த புகார்களை டிரம்ப் மறுத்தார். புகார் கூறியவர்களை பொய்யர்கள் என விமர்சித்தார். தேர்தலில் அவர் வெற்றி பெற்று ஜனாதிபதியாகி விட்டார்.

அடுத்த ஆண்டு அங்கு மீண்டும் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் களம் இறங்க உள்ளார்.

இந்தநிலையில் அவர் மீது அமெரிக்காவில் புகழ்பெற்ற ‘பாக்ஸ் நியூஸ்’ டி.வி. சேனலில் நிருபராக இருந்த கர்ட்னி பிரையல் (வயது 39) பாலியல் புகார் கூறி இருக்கிறார்.

தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கே.டி.எல்.ஏ. வானொலியில் பணியாற்றி வருகிற இந்தப் பெண் நிருபர், தனது ஊடக அனுபவங்களை அடிப்படையாக வைத்து ‘டுநைட் அட் 10: கிக்கிங் பூஸ்அன்ட் பிரேக்கிங் நியூஸ்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி உள்ளார். இந்த வாரம், அந்தப் புத்தகம் வெளியாக உள்ளது. அந்த புத்தகத்தில் அவர் கூறி இருப்பதாவது:-



ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு முன்பாக டிரம்ப் அமெரிக்க அழகி போட்டி நடத்தினார். அந்தப்போட்டியில் நான் ஒரு நடுவராக இருக்க விரும்பினேன். இதுதொடர்பாக டிரம்ப் தரப்பில் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். அப்போது டிரம்ப், நான் இன்னொரு டி.வி. நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு, அழகிப்போட்டியில் நடுவராக இருக்க முடியாது என்று கூறினார்.

அவர் எனது பணி தொடர்பான லட்சியங்கள் பற்றி விசாரித்தார். பாக்ஸ் நியூஸ் சேனலில் நான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை வெகுவாக பாராட்டினார்.

தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது நீ ஒரு நாள் என் அலுவலகத்துக்கு வா, நாம் முத்தமிடலாம் என்று அழைத்தார்.

நான் அதிர்ந்து போனேன். உடனே, ‘‘டொனால்டு, நாம் இருவருமே திருமணம் ஆனவர்கள்’’ என கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டேன்.

அவரது அழைப்பு காரணமாக, டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, அது தொடர்பான செய்திகளை சேகரித்து வெளியிடுவது எனக்கு கடினமாக அமைந்தது. தன்னைப் பற்றி பாலியல் புகார்கள் கூறிய பெண்களை அவர் பொய்யர்கள் என்று கூறியது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. நான் அவர்களை நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் தரப்பில் எந்த கருத்தும் உடனடியாக வெளியிடவில்லை.

இருப்பினும் இவரது புகார், அமெரிக்காவை அதிர வைத்துள்ளது.
Tags:    

Similar News