செய்திகள்
பிரீவே தேவாலயம்

அமெரிக்காவில் தேவாலயத்தில் 2 பேரை சுட்டுக் கொன்ற மர்ம நபர்

Published On 2019-12-30 08:29 GMT   |   Update On 2019-12-30 08:29 GMT
அமெரிக்காவில் தேவாலயத்தில் 2 பேரை சுட்டுக்கொன்ற மர்ம நபரை பாதுகாப்பு வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். படுகாயமடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஹூஸ்டன்:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், வையிட் சென்டில்மென்ட் பகுதியில் உள்ள பிரீவே தேவாலயத்தில் அந்நாட்டு நேரப்படி காலை 11.50 மணிக்கு பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது.

அப்போது மர்ம நபர் ஒருவர் எழுந்து பிரார்த்தனை நடந்த மேடை அருகே சென்றார். திடீரென அவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தேவாலயத்தில் இருந்து அலறியடித்தபடி வெளியே ஓடினார்கள்.

மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். அப்போது தேவாலயத்தில் இருந்த பாதுகாப்பு வீரர்கள் உடனே சுதாரித்துக் கொண்டு தங்கள் துப்பாக்கியால் மர்ம நபரை சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

பின்னர் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சை பலனின்றி 2 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து வருவதையொட்டி தேவாலயத்தில் உள்ள உறுப்பினர்கள் சிலருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள்தான் மர்ம நபரை சுட்டு கொன்றனர்.

இதுகுறித்து டெக்சாஸ் மாகாண போலீசார் கூறும்போது, “தேவாலயத்தில் இருந்து பாதுகாப்பு படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு மர்ம நபரை சுட்டு வீழ்த்தினர். இதனால் பலரது உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. அவர்கள் தைரியமாக செயல்பட்டு பெரும் உயிர் இழப்பை தடுத்து உள்ளனர்” என்றனர்.

மர்ம நபர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார்? அவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

டெக்சாஸ் மாகாணம் சதர்லேண்ட் பகுதியில் உள்ள தேவாலயத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சூட்டில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News