செய்திகள்
பெஞ்சமின் நேதன்யாகு

இஸ்ரேல்: லிக்குட் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகு அபார வெற்றி

Published On 2019-12-27 10:55 GMT   |   Update On 2019-12-27 10:55 GMT
இஸ்ரேல் நாட்டில் ஆட்சி அமைக்க முடியாமல் பாராளுமன்றத்துக்கு மறுதேர்தல் நடைபெறும் நிலையில் ஆளும்கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகு வெற்றி பெற்றார்.
ஜெருசலேம்:

இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த இரண்டாம் முறை தேர்தலில்கூட நேதன்யாகுவின் லிக்குட் கட்சி உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் அங்கு யாராலும் ஆட்சி அமைக்க முடியாத அரசியல் சூழல் நிலவுகிறது.

நீலம் வெள்ளை கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவுகளும் தோல்வி அடைந்து விட்ட நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்துக்கு மீண்டும் ஒரு  தேர்தலை நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இந்நிலையில், அந்நாட்டை பலமுறை ஆட்சி செய்த லிக்குட் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் காபந்து பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 72.5 சதவீதம் வாக்குகளை வாங்கி அபார வெற்றி பெற்றார்.



அவரை எதிர்த்து போட்டியிட்ட கிடியோன் சார் 27.5 சதவீதம் வாக்குகளுடன் தோல்வியை தழுவினார்.

இந்த மகத்தான வெற்றிக்கு வாக்களித்த கட்சியின் பிரதிநிதிகளுக்கு நேதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.

’கடவுளின் உதவியாலும் உங்களின் ஆதரவாலும் வரும் தேர்தலில் நமது கட்சியை மிகப்பெரிய வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வேன். அதன் மூலம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அபரிமிதமான வளர்ச்சிப்பாதைக்கு இஸ்ரேலை  கொண்டு செல்லலாம்’ என தனது டுவிட்டர் பக்கத்தில்
அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News