செய்திகள்
இம்ரான்கான்

முஷரப்புக்கு மரண தண்டனை - இம்ரான்கான் அவசர ஆலோசனை

Published On 2019-12-19 05:17 GMT   |   Update On 2019-12-19 05:17 GMT
தேச துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, ஆலோசனை நடத்துவதற்காக தனது கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்துக்கு பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

தேச துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டு சிறப்பு கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இந்த விவகாரம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தண்டனையை பாகிஸ்தான் ராணுவம் கடுமையாக விமர்சித்து இருக்கிறது. ராணுவத்தின் முன்னாள் தளபதி, பாகிஸ்தானின் அதிபர், போர்களில் பங்கேற்பு என 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்காக உழைத்த முஷரப் ஒருபோதும் துரோகியாக இருக்கமாட்டார் என ராணுவம் கூறியுள்ளது. மேலும் இந்த தண்டனையால் மிகுந்த வலியும், வேதனையும் அடைந்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

இதைப்போல முஷரப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தான் அரசிலும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கின்றன. எனவே இது ஆலோசனை நடத்துவதற்காக தனது கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்துக்கு பிரதமர் இம்ரான்கான் அவசர அழைப்பு விடுத்துள்ளார். முஷரப் தண்டனை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து முஷரப் மேல்முறையீடு செய்வதற்கு அரசு துணை நிற்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News