search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேச துரோக வழக்கு"

    கேரளாவில் மலப்புரம் பகுதியில் உள்ள கல்லூரியில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

    கல்லூரி முதல்வர் இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார்.

    இதில் அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் முகம்மது ரின்ஷாத் (வயது 20), முகம்மது பரிஷ் (19) ஆகியோர் போஸ்டர் ஒட்டியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான மாணவர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனைச்சட்டம் 124ஏ பிரிவின் கீழ் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட் டது.

    இந்த மாணவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? போஸ்டர் ஒட்ட தூண்டியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    துபாயில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், அவர் மீதான தேச துரோக வழக்கில் முறையாக ஆஜராகாவிட்டால், அவமானப்பட வேண்டி இருக்கும் என பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். #PervezMusharraf #PakistanSC
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் கடந்த 2016-ம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார். அவர்மீது தேச துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் அவர் போக்குகாட்டி வருகிறார்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது முஷரப்பின் உடல்நிலை சீராக இல்லை எனவும், அதன் காரணத்தால் அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனவும் தெரிவித்தார்.



    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார், ஒருவேளை முஷரப் ஒழுங்காக ஆஜர் ஆகாவிட்டால், கருணையின்றி வலுக்கட்டாயமாக அவர் ஆஜர்படுத்தப்படுவார் என மிக கடுமையாக எச்சரித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து அடுத்த ஒருவாரத்துக்குள் முஷரப்பின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட தலைமை நீதிபதி கொண்ட அமர்வு, வழக்கு விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #PervezMusharraf #PakistanSC
    பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் சுதிர்குமார் என்பவர் தேச துரோகத்தில் ஈடுபட்டதாக சித்து மீது புகார் மனு தாக்கல் செய்தார். #NavjotSinghSidhu
    முசாபர்பூர்:

    கடந்த 18-ந்தேதி நடந்த பாகிஸ்தான் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட இந்தியாவின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வாவை கட்டித் தழுவினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.



    சித்துவின் இந்த செயலுக்கு எதிராக பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் சுதிர்குமார் என்பவர் புகார் மனு தாக்கல் செய்தார்.

    அதில், ‘எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் பலர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு காரணமான பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வாவை சித்து கட்டித் தழுவி இருப்பது என்னைப்போன்ற ஏராளமான இந்தியர்களின் உணர்வை காயப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது, நாட்டுக்கு தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை கேலி செய்வதாகவும் உள்ளது. எனவே சித்து மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு வருகிற 24-ந்தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மாஜிஸ்திரேட்டு தெரிவித்தார்.  #NavjotSinghSidhu
    தேசத்துரோக வழக்கில் கைதான திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப மறுத்த நீதிபதி, எந்த அடிப்படையில் அவர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது? என்று போலீசாரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். #ThirumuruganGandhi
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டம் தொடர்பாகவும், சேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரம் தொடர்பாகவும் தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக கூறி மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதற்கிடையே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூடு குறித்து கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் திருமுருகன் காந்தி பேசி உள்ளார். இந்த வீடியோ யூ டியூப்பில் வெளியாகி உள்ளது.

    இதைத்தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார், திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையொட்டி அவர் தலைமறைவாக இருந்தார் என்று வெளியான தகவல் தவறு.

    இந்தநிலையில் ஜெர்மனியில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்த அவரை தமிழக போலீசார் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்திய அவரை நேற்று சென்னை சைதாப்பேட்டை பெருநகர 11-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க மனு அளித்தனர்.

    திருமுருகன் காந்தி தரப்பில் ஆஜரான வக்கீல் ஐ.பெரியசாமி, “திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்தே அவர் பேசி உள்ளார். அவரது பேச்சில் தேசத்துரோகம் எதுவும் இல்லை. எனவே, அவரை சிறைக்கு அனுப்பக்கூடாது” என்று வாதாடினார்.


    அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் திருமுருகன் காந்தி பேசியதாக கூறிய கருத்துகளை எழுத்து வடிவில் நீதிபதியிடம் கொடுத்தார். அதை வாசித்து பார்த்த நீதிபதி, “இதில் தேசத்துரோகம் எதுவும் இல்லையே? எந்த அடிப்படையில் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்துள்ளர்கள்?. ஐ.நா.வில் பேசியதற்கு இங்கு எப்படி வழக்கு போட முடியும்? எந்த அடிப்படையில் சிறையில் அடைக்க கோருகிறீர்கள்?” என்று போலீசாரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

    இதன்பின்னர், திருமுருகன்காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட நீதிபதி மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பாக கைது செய்த நேரத்தில் இருந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தலாம் என்று சட்ட நடைமுறை இருப்பதால் திருமுருகன்காந்தியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, திருமுருகன்காந்தியிடம் 24 மணி நேரம் மட்டும் போலீசார் விசாரணை நடத்தி விட்டு விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து அவரை போலீசார், சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதன்பின்பு, தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றதாக ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் திருமுருகன்காந்தி மீது ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் அவரை கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் திருமுருகன் காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அவரை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #ThirumuruganGandhi
    தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரு விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டார். #ThirumuruganGandhi
    பெங்களூரு:

    மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் திருமுருகன் காந்தி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசுக்கு எதிராக சென்னை தேனாம்பேட்டையில் போராட்டம் நடத்தினார். அப்போது ஐ.ஓ.சி. நிறுவனம் மீது கல் எறிந்ததாக கூறி இவர் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தை சென்னை மெரினா கடற்கரையில் நடத்த முயன்ற போது திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சி நிர்வாகிகளான டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 4 மாதங்கள் சிறையில் இருந்த இவர்கள் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் விடுதலை ஆனார்கள். இதுதவிர மேலும் பல வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருந்தன.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் இவர் வெளிநாடு சென்றுவிட்டார்.

    ஜெர்மனி சென்ற திருமுருகன் காந்தி அங்கு ஈழத்தமிழர் நலன் தொடர்பான கூட்டத்தில் பேசினார். பின்னர் ஐ.நா. சபையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பேசினார். பல்வேறு நாடுகளுக்கு சென்று பேசிவிட்டு நார்வேயில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை 3.45 மணிக்கு பெங்களூரு விமான நிலையம் வந்து இறங்கினார். அப்போது அவரை பெங்களூரு விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.

    இதுகுறித்து தமிழக உள்துறைக்கும், சென்னை நகர போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சென்னை நகர போலீசார் அவரை அழைத்து வர பெங்களூரு விரைந்து உள்ளனர்.

    திருமுருகன் காந்தி சென்னை அழைத்து வரப்பட்ட பிறகு அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவிட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.

    அவர் கைதானது குறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவர் ஐ.நா. சபையில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது 124 ஏ என்ற தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் தமிழக அரசு வழக்குப்பதிவு செய்திருந்தது. அவரை கைது செய்ய லுக்அவுட் நோட்டீசையும் தமிழக அரசு பிறப்பித்திருந்தது.

    இது தொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த நோட்டீசை தமிழக அரசு அனுப்பி இருந்தது. இன்று அதிகாலை நார்வேயில் இருந்து பெங்களூரு திரும்பிய அவரை பெங்களூரு விமான நிலைய போலீசார் கைது செய்து அங்கேயே வைத்துள்ளனர்.

    இதுகுறித்து சென்னை நகர போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டு மூலம் விடுதலை ஆனார். மேலும் பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. அதையெல்லாம் அவர் சந்தித்து வருகிறார். தற்போது தேச துரோக வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கையும் சட்டப்படி சந்திப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThirumuruganGandhi
    இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வேல்முருகன் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டதை அடுத்து அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
    ராயபுரம்:

    உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை கடந்த 25-ந்தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சிறையில் வேல்முருகன் உண்ணாவிரதம் இருந்தார். கடந்த 28-ந்தேதி அவரை வைகோ சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தினார்.

    இதையடுத்து வேல்முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார். எனினும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    கடந்த ஏப்ரல் மாதம் 10-ந்தேதி நெய்வேலியில் காவிரி பிரச்சனை தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வேல்முருகன் மீது நெய்வேலி தெர்மல் நகர் போலீசார் திடீரென தற்போது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே இன்று காலை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வேல்முருகன் திடீரென புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது தேச துரோக வழக்கை கண்டித்து மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கி இருப்பதாக அவர் கூறினார்.

    இது தொடர்பாக நிருபர்களிடம் வேல்முருகன் கூறியதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதற்காக சென்றபோது என்னை கைது செய்தனர். என் மீதான கைது நடவடிக்கையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன்.

    நேற்று இரவு நெய்வேலி போலீசார் தேசதுரோக வழக்கில் என்னை கைது செய்திருப்பதாக கூறினார்கள். அது முதல் நான் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளேன். உணவு, மருந்து, டிரிப்ஸ் எடுக்கவில்லை.

    இலங்கையில் ராணுவ அடக்கு முறையை கணடித்து திலீபன் உண்ணாவிரதம் இருந்தது போல் நானும் உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன்.

    மத்திய, மாநில அரசுகளின் அழுத்தத்தின் காரணமாகவே டீனை கட்டாயப்படுத்தி அவசர சிகிச்சை பிரிவில் இருந்த என்னை டிஸ்சார்ஜ் செய்கிறார்கள்.

    பல்வேறு தமிழ் அமைப்பினர் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், துப்பாக்கி சூட்டை கண்டித்தும் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டதுபோல், துப்பாக்கி சூட்டில் பலியான என் உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வகையில் துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.

    தூத்துக்குடியில் உயர் பொறுப்பில் உள்ள போலீஸ் அதிகாரிகள் வட மாநிலத்தவர் என்பதால் தமிழர்களை குறி வைத்து தாக்குகிறார்கள். நான் ஒரு பச்சை தமிழன். தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால் என் மீது கைது நடவடிக்கை தொடர்கிறார்கள்.


    நான் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன். தொடர்ந்து தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும் குரல் கொடுப்பேன். மத்திய-மாநில அரசின் அடுக்குமுறைக்கு அஞ்ச மாட்டேன்.

    தூத்துக்குடியில் போராடியவர்களை சமூக விரோதிகள் என்று ரஜினி கூறி உள்ளார். அவர்தான் தனது படங்களில் மது குடிப்பது மற்றும் புகை பிடிப்பது போன்று காட்சிகள் அமைத்து இளைய தலைமுறை தம்பி, தங்கைகளை தவறான பாதைக்கு அழைத்து சென்று உள்ளார்.

    அறவழியில் போராடியவர்களை சமூக விரோதிகள் என்று கூறிய ரஜினியை வன்மையாக கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து வேல்முருகனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதியம் 12 மணி அளவில் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். #Velmurugan
    ×