செய்திகள்
சாஸ் நிரப்பப்பட்ட போதைப்பொருள்

‘சாஸ்’ நிரப்பப்பட்ட பாட்டில்களில் கடத்திய ரூ.1,449 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

Published On 2019-11-01 00:37 GMT   |   Update On 2019-11-01 00:37 GMT
அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குள் ‘சாஸ்’ நிரப்பப்பட்ட பாட்டில்களில் கடத்திய ரூ.1,449 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிட்னி:

உணவுப்பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடியது ‘சாஸ்’. இந்த ‘சாஸ்’ நிரப்பப்பட்ட 768 பாட்டில்களில், 400 கிலோ எடைகொண்ட படிக நிலையிலான ‘மெத்தம்பேட்டமைன்’ என்ற போதைப்பொருள் கலந்து ஆஸ்திரேலியாவுக்குள் கடத்தப்பட்டுள்ளது.

‘சாஸ்’ பாட்டில்களில் சாஸ்சுடன் கலந்து இருந்த போதைப்பொருட்களை தனியாக பிரித்தெடுப்பதற்காக சிட்னி நகரில் உள்ள ஒரு ஆய்வகத்துக்கு எடுத்துச்சென்றபோது, போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றினர்.

அமெரிக்க நாட்டில் இருந்து ஆஸ்திரேலிய நாட்டுக்குள் கடத்தப்பட்ட இந்த போதைப்பொருளின் மதிப்பு 207 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1,449 கோடி) ஆகும்.

இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 4 பேரும்தான் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய பங்கு வகித்தவர்கள் என ஆஸ்திரேலிய அரசு உயர் அதிகாரி ஸ்டூவர்ட் ஸ்மித் தெரிவித்தார். இந்த போதைப்பொருட்கள் அமெரிக்காவில் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, இதை அனுப்பி வைத்தது யார் என்பதை உறுதி செய்ய அமெரிக்க போலீசாருடன் ஆஸ்திரேலிய போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News