செய்திகள்
நேதன்யாகுவை ஆட்சியமைக்கும்படி கூறிய அதிபர் ரிவ்லின்

இஸ்ரேல் தேர்தலில் திருப்பம்- நேதன்யாகுவை ஆட்சியமைக்க அழைத்த அதிபர்

Published On 2019-09-26 08:47 GMT   |   Update On 2019-09-26 08:47 GMT
இஸ்ரேலில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், பிரதமர் நேதன்யாகுவை ஆட்சியமைக்கும்படி அதிபர் கூறி உள்ளார்.
ஜெருசலேம்:

இஸ்ரேல் நாட்டில் கடந்த வாரம் பாராளுமன்றத் தேர்தல் நடந்தது.  120 உறுப்பினர்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சியான புளுஅண்ட்ஒயிட் கட்சி 33 இடங்களை கைப்பற்றியது. பிரதமர் நேதன்யாகுவின் கர்சர்வேட்டிவ் லிகுட் கட்சி 32 இடங்களை பிடித்தது. ஆட்சியமைக்க 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

கூட்டணி கட்சிகளை சேர்த்தால் நேதன்யாகுவுக்கு 55 எம்.பி.க்களும், புளுஅண்ட்ஒயிட் கட்சி தலைவர் பென்னி கான்ட்சுக்கு 57 உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர். அப்போதும் இரு தரப்பினருக்கும் பெரும்பான்மை இல்லை. எனவே, புதிய ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இதையடுத்து ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து ஒற்றுமை அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சி தொடங்கியது. ஆனால் அதிகார பகிர்வு விஷயத்தில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே, அரசியல் முட்டுக்கட்டை நீடிக்கிறது.

இந்நிலையில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை ஆட்சியமைக்கும்படி அதிபர் ரியுவென் ரிவ்லின் கேட்டுக்கொண்டுள்ளார். நேதன்யாகு அரசு அமைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தனது முடிவு ஒரு தீர்வு அல்ல என்றும், அரசியல் முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பதில் இரு கட்சி தலைவர்களுக்கும் பொறுப்பு உள்ளது என்றும் கூறினார்.

நேதன்யாகு பேசும்போது, “எனது லிகுட் கட்சியோ அல்லது கான்ட்சின் ப்ளூ அண்ட் ஒயிட் கட்சியோ ஒரு கூட்டணி அமைக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் இணைந்து செயல்படுவதுதான் தீர்வுக்கான ஒரே வழி” என்றார்.

இந்த ஆண்டு மூன்றாவது பொதுத் தேர்தலை தவிர்க்க நேதன்யாகுவால் முடியும் என்றும், இதற்காக அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார் என்றும் அதிபர் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News