செய்திகள்
பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் ஜாவேத் பஜ்வா

காஷ்மீர் நிலவரம்- சீன ராணுவ தலைவருடன் பாகிஸ்தான் தளபதி ஆலோசனை

Published On 2019-08-27 11:10 GMT   |   Update On 2019-08-27 11:10 GMT
காஷ்மீர் நிலவரம் தொடர்பாக சீன ராணுவ ஆணைய துணைத் தலைவருடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆலோசனை நடத்தினார்.
இஸ்லாமாபாத்:

சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் சூ கிலியாங்  தலைமையிலான உயர்மட்டக் குழு, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தக் குழு நேற்று பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்திற்கு சென்றது. அங்கு சூ கிலியாங்கும், பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் ஜாவேத் பஜ்வாவும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுகள், பிராந்திய பாதுகாப்பு, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் குறிப்பாக காஷ்மீரின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக, பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி, சீனா சென்று இவ்விவகாரம் குறித்து முக்கிய தலைவர்களுடன் விவாதித்தார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. சபையில் விவாதிக்கப்பட்ட போது பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு தெரிவித்தது. ஆனால் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் ஒதுங்கிக்கொண்டன. அது இந்தியா-பாகிஸ்தான் இடையிலான விவகாரம், அதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டாம் என அந்த நாடுகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News