செய்திகள்
லிபியா அகதிகள்.

லிபியாவில் நடுக்கடலில் சிக்கி தவித்த 75 அகதிகள் மீட்பு

Published On 2019-08-02 14:41 GMT   |   Update On 2019-08-02 14:41 GMT
லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் சென்ற அகதிகள் 75 பேர் நடுக்கடலில் கடற்படையால் மீட்கப்பட்டனர்.
திரிபோலி:

வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வாழும் மக்கள் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி சட்ட விரோதமாக கடலில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் பல்வேறு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஆகையால், அந்நாட்டு கடற்படையினர் தங்கள் கடல் எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியை தீவிரபடுத்தியுள்ளனர்.

இந்நிலையில், லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயன்ற 75 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மீட்புக்குழு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

லிபியாவின் ஜூவ்வாரா நகரில் இருந்து 120 கி.மீ தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கில் படகுகளில் சென்ற 75 அகதிகள் உள்நாட்டு கடற்படையினரால் நடுக்கடலில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், சீரான மற்றும் சாதகமான வானிலை காரணமாக கடலில் பயணிக்கும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், கடந்த மாதம் (ஜூலை 25) லிபியாவிலிருந்து ஐரோப்பா செல்லும் நோக்கில் சென்ற அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 150 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News