செய்திகள்
ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி

ஈரானில் உளவு பார்த்த சிஐஏ கூலிப்படையினர் 17 பேர் கைது: சிலருக்கு மரணதண்டனை விதிப்பு

Published On 2019-07-22 16:16 GMT   |   Update On 2019-07-22 16:16 GMT
ஈரான் நாட்டில் செயல்பட்டுவந்த அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பை சேர்ந்த கூலிப்படையினர் 17 பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டெஹ்ரான்:

அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் கைவிடப்பட்டதையடுத்து ஈரான் அணு ஆயுத தயாரிப்பை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. மேலும், தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்பட்டது. 

இந்த நடவடிக்கை இருநாடுகளுக்கு இடையிலான மோதலுக்கு வழிவகுத்த நிலையில் ஈரானை மேலும் அச்சுறுத்தும் விதமாக மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவித்து வந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

இந்நிலையில், ஈரான் நாட்டில் செயல்பட்டுவந்த அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பை சேர்ந்த கூலிப்படையினர் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது குறித்து ஈரான் நாட்டின் செயல்பட்டு வரும் உள்ளூர் செய்தி நிறுவனம் வெளியீட்ட செய்தியாவது:-

ஈரான் நாட்டில் அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பால் கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய உளவு வலைப்பின்னல் தகற்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையில் 17 உளவாளிகள் கைது செய்யப்பட்டு அதில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்படுள்ளது.

கைது செய்யப்பட்ட உளவாளிகள் அனைவரும் ஈரான் நாட்டின் அணு சக்தி, ராணுவம், மென்பொருள் போன்ற துறைகளில் அரசுக்கு உதவும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளனர். அந்த நிறுவனங்கள் மூலம் ஈரானின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியிலான தகவல்களை திருடி அதை அமெரிக்காவின் சிஐஏ அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த உளவு வேலையில் சி.ஐ.ஏ. அதிகாரிகள் யாரும் நேரடியாக ஈடுபடவில்லை. கைக்கூலிகள் மூலம் தகவல்களை பெற்று அவற்றை அமெரிக்க அரசுடன் பகிர்ந்துள்ளனர்.

இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில், அமெரிக்க உளவாளிகள் 17 பேர் ஈரானில் கைது செய்யப்பட்டு அவர்களில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியீட்டுள்ள நிலையில் இது குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ கூறியதாவது:-

ஈரான் பல காலங்களாக பொய்களின் புகழிடமாக உள்ளது.  உலக நாடுகளிடையே பொய் தகவலை பரப்புவது அவர்களுக்கு இயற்கையான ஒன்று. மேலும் அமெரிக்க உளவாளிகள் யாரும் ஈரானில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படவில்லை. ஒருவேளை அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால் அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News