செய்திகள்

ரம்ஜான் மாதம் மிகவும் சிறப்புக்குரியது - வெள்ளை மாளிகை இப்தார் விருந்தில் டிரம்ப் நெகிழ்ச்சி

Published On 2019-05-14 10:12 GMT   |   Update On 2019-05-14 10:12 GMT
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் முஸ்லிம் பிரமுகர்களுக்கு இப்தார் விருந்தளித்த டொனால்ட் டிரம்ப், அமைதி மற்றும் சகிப்புத்தன்மையை பேணும் ரம்ஜான் மாதம் மிகவும் சிறப்புக்குரியது என குறிப்பிட்டார்.
வாஷிங்டன்:

இஸ்லாமியர்களின் நோன்பு காலமான ரம்ஜான் மாதத்தில் வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் முஸ்லிம் பிரமுகர்களுக்கு இப்தார் விருந்து அளிப்பது மரபாக இருந்து வருகிறது.

அவ்வகையில், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்காலத்தில் இரண்டாவது முறையாக நேற்றிரவு இப்தார் விருந்தளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய டிரம்ப் கூறியதாவது:-



அனைத்து வகையான மத நம்பிக்கைகளை கொண்ட மக்களும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழத்தகுந்த இடமாக அமெரிக்கா இருப்பதற்காக கடவுளுக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்களுக்கு இந்த ரம்ஜான் மாதம் புனிதமானது. தான,தர்மங்கள் செய்யவும் சக மக்களுக்கு சேவை செய்யவும் அண்டை வீட்டார், சமூகத்தினர் மற்றும் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்கவும் ரம்ஜான் மிகவும் சிறப்புக்குரிய மாதமாக உள்ளது.  

நம்பிக்கை, சகிப்புத்தன்மை, அமைதி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இப்தார் விருந்தில் நாம் ஒன்றிணைகிறோம். நியூசிலாந்து நாட்டின் மசூதிகளில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள், இலங்கை, கலிபோர்னியா, பிட்ஸ்பர்க் ஆகிய பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பலியான கிறிஸ்தவ, யூத மக்களுக்கும் இதர கடவுளின் பிள்ளைகளின் நினைவுகளால் இந்த வேளையில் நமது இதயம் வேதனைப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News