செய்திகள்

அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்த இந்தியர்கள் கைது - சித்ரவதை செய்வதாக புகார்

Published On 2019-02-03 05:55 GMT   |   Update On 2019-02-03 07:04 GMT
அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்ததாக இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். விடுதலை செய்யக்கோரி சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அவர்கள் தங்களை சிறை அதிகாரிகள் சித்ரவதை செய்வதாக புகார் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன்:

அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் வெளிநாட்டினர் கடுமையாக தடுத்து நிறுத்தப்படுகின்றனர். மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மீறி நுழையும் வெளி நாட்டினர் கைது செய்யப்படுகின்றனர். சமீபத்தில் இந்தியா மற்றும் நிகாரகுவாவை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக கைது செய்யப்பட்டனர். அவர்களில் 10 பேர் எல்பாசோ சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தங்களை விடுதலை செய்யக்கோரி அவர்கள் சிறையில் ஒரு வாரத்துக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதனால் அவர்கள் மயக்கம் அடைந்தனர்.

எனவே, கோர்ட்டு உத்தரவுப்படி அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் உண்ணாவிரதம் இருக்கும் தங்களை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று மூக்கில் குழாய் சொருகி திரவங்களை செலுத்தி சித்ரவதை செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ‘சிங்’ என பெயரிடப்பட்ட கைதி ஒருவர் பேட்டி அளித்துள்ளார். இதில் வாழ அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு வந்தோம். எங்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சிறையில் உண்ணாவிரதம் இருந்தோம். ஆனால் எங்களை கட்டாயப்படுத்தி வலுக்கட்டாயமாக தூக்கி சென்று படுக்கையில் கால், கைகளை கட்டி மூக்கில் குழாய் வழியாக திரவங்களை செலுத்தி சித்ரவதை செய்கின்றனர். இதனால் எங்களுக்கு வாந்தி ஏற்பட்டது. எங்களால் சரிவர பேச முடியவில்லை. மூக்கு வழியாக தொண்டை வரை குழாயை சொருகி கஷ்டப்படுத்துகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இவர்களை அமெரிக்க பிரதிநிதிகள் நேரில் சென்று பார்த்தனர். அரசின் இந்த நடவடிக்கை ஏற்றுக் கொள்ள தக்கதல்ல என்றனர்.

அதே நேரத்தில் கோர்ட்டு உத்தரவுப்படி இவர்களுக்கு மூக்கு வழியாக குழாய் மூலம் திரவ உணவு செலுத்துவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News