செய்திகள்

துருக்கியில் அதிவேக ரெயில் விபத்து: 9 பேர் பலி- 47 பேர் காயம்

Published On 2018-12-13 06:29 GMT   |   Update On 2018-12-13 11:31 GMT
துருக்கியில் இன்று அதிவேக ரெயில், மற்றொரு என்ஜின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். #TurkeyTrainCrashes
அங்காரா:

துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து மத்திய துருக்கியின் கொன்யா நோக்கி இன்று காலை அதிவேக ரெயில் ஒன்று 206 பயணிகளுடன் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களில் மர்சாண்டிஸ் ரெயில் நிலையத்தினுள் நுழைந்தபோது, திடீரென அதே பாதையில் சென்றுகொண்டிருந்த ரெயில் என்ஜின் மீது பயங்கரமாக மோதியது.

இதனால் அதிவேக ரெயிலின் சில பெட்டிகள் தடம்புரண்டு ஒன்றுடன் ஒன்று மோதியது.  ஒரு பெட்டி நடைமேம்பாலத்தின் மீது மோதி நொறுங்கியது. இதனால் இரும்பினால் அமைக்கப்பட்ட அந்த மேம்பாலமும் உடைந்தது.


விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில் பெட்டிகளில் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 47 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அங்காரா-கொன்யா அதிவேக ரெயில் பாதை 2011ம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன்பின்னர் 2014ல் அங்காராவையும் இஸ்தான்புல் நகரையும் இணைக்கும் அதிவேக பாதை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #TurkeyTrainCrashes
Tags:    

Similar News