செய்திகள்

ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் ராஜினாமா

Published On 2018-11-21 04:54 GMT   |   Update On 2018-11-21 04:54 GMT
ஐநா நெறிமுறைகளுக்கு மாறாக பயணத்திட்டங்களுக்கு அதிக செலவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். #UNEnvironmentChief
ஜெனீவா:

கென்யாவின் நைரோபி நகரை தலைமையிடமாக கொண்டு, ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் தலைவராக பதவி வகித்து வந்த எரிக் சோல்ஹிம் தனது அதிகாரப்பூர்வ பயணங்களுக்காக 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3.57 கோடி) செலவிட்டது, அந்த அமைப்பின் தணிக்கையில் கண்டறியப்பட்டது. மேலும், தனது பயணங்களுக்கான செலவுத் தொகையை பெறுவதில், அவர் நெறிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாக தணிக்கை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது.

ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு, நிதி பற்றாக்குறையில் தவிக்கும் நிலையில், எரிக்கின் செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. மேலும், சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் அவர் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் பதவி விலகியுள்ளார்.

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை அமல்படுத்துவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகள், போலந்தில் அடுத்த மாதம் 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் பதவி விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.



பதவி விலகியுள்ள எரிக் சோல்ஹிம்  நார்வே நாட்டைச் சேர்ந்த முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆவார். தனது பதவி விலகல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எரிக், தனது செயல்கள் அனைத்தும் சுற்றுச்சுழல் நலனுக்காகவே இருந்தாக குறிப்பிட்டுள்ளார்.

அவரது ராஜினாமாவை ஐநா பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டதாக ஐநா செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார். ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை சுற்றுச்சூழல் துணை இயக்குநர் ஜாய்ஸ் எம்ஸூயா தற்காலிகாக தலைவராக பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #UNEnvironmentChief

Tags:    

Similar News