செய்திகள்

இந்தோனேசியா சுனாமி, நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2000-ஐ நெருங்குகிறது

Published On 2018-10-07 22:42 GMT   |   Update On 2018-10-07 22:42 GMT
இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2000-ஐ நெருங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Indonesiaquake
ஜகார்தா:

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிவுநிலைக்கு தள்ளப்பட்டது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமானது.

சுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்பு பணியில் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மேலும் பலர் மாயமாகி போயுள்ளனர். அதே நேரத்தில் உள்ளே சிக்கி தவிப்பவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1944 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக, மீட்புப்படை அதிகாரிகள் கூறுகையில், சுமார் 62,359 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது வரை 2,549 பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், பல அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள் என பல கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை  உயரலாம் என தெரிவித்துள்ளனர். #Indonesiaquake
Tags:    

Similar News