செய்திகள்

ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 26 பேர் பலி

Published On 2018-08-23 23:02 GMT   |   Update On 2018-08-23 23:02 GMT
ஏமன் நாட்டில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 22 குழந்தைகள் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 26 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சனா:

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.

சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், ஹோடேய்டா நகரில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அட் துராய்ஹிமி பகுதியில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 22 குழந்தைகள் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 26 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

அட் துராய்ஹிமியின் ஒரு பகுதியான அல்கோயுய் எனும் இடத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி கூட்டுப் படைகளுக்கும் இடையே கடும் யுத்தம் நடைபெற்று வருகிறது. இதனால், இப்பகுதியில் இருந்து பலர் வாகனங்களில் தப்பி வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.

இவ்வாறு தப்பியோட முயன்றவர்களின் மீது நடைபெற்ற வான் தாக்குதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News