செய்திகள்

இம்ரான்கான் மன்னிப்பு கேட்க தேர்தல் கமி‌ஷன் வலியுறுத்தல்

Published On 2018-08-10 05:26 GMT   |   Update On 2018-08-10 05:26 GMT
தேர்தல் அன்று தனது வாக்கை அனைவரும் பார்க்கும்படி பகிரங்கமாக பதிவு செய்தது குறித்து இம்ரான்கான் மன்னிப்பு கேட்க தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது. #ImranKhan
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் கடந்த (ஜூலை) மாதம் 25-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

அதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இவர் இஸ்லாமாபாத் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தேர்தல் அன்று தனது வாக்கை அனைவரும் பார்க்கும்படி பகிரங்கமாக பதிவு செய்தார். அந்த போட்டோ மற்றும் வீடியோ அனைத்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாகிஸ்தான் தேர்தல் கமி‌ஷனில் புகார் செய்யப்பட்டது. அதற்கு 4 பேர் கொண்ட குழுவிடம் பதில் அளிக்கும்படி இம்ரான்கானுக்கு தலைமை தேர்தல் கமி‌ஷனர் நோட்டீசு அனுப்பினார்.



அதற்கு இம்ரான்கான் சார்பில் அவரது சட்ட ஆலோசகர் பாபர் அவான் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில், இம்ரான்கான் வாக்கு பதிவு செய்த போட்டோவும், வீடியோவும் அவரது அனுமதியின்றி எடுக்கப்பட்டது.

இம்ரான்கான் வாக்களித்த போது தொண்டர்களின் கூட்ட நெரிசலால் வாக்கை பதிவு செய்வதை மறைப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த திரை கீழே விழுந்துவிட்டது. எனவே பகிரங்கமாக வாக்களித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறப்பட்டிருந்தது.

ஆனால் அவரது பதிலை தேர்தல் கமி‌ஷன் ஏற்றுக் கொள்ளவில்லை மாறாக பகிரங்கமாக வாக்களித்தற்காக இம்ரான்கான் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் அவரது கையெழுத்துடன் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. #ImranKhan
Tags:    

Similar News