செய்திகள்

இன்று உலக அகதிகள் தினம் - டிரம்ப் உத்தரவால் பெற்றோரை பிரிந்து அமெரிக்க எல்லையில் கதறும் குழந்தைகள்

Published On 2018-06-20 11:50 GMT   |   Update On 2018-06-20 11:50 GMT
எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் குடியேறிகள் சிறையில் அடைக்கப்பட்டு, பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் கதறி அழும் ஆடியோ பதிவை ஒரு இணையதளம் வெளியிட்டுள்ளது. #USborderpolicy #Trump #VoiceofChildren

வாஷிங்டன்:

உலக அகதி நாள் ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அன்றைய நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 

இந்நிலையில், அகதிகள் தினமாக இன்று அகதிகளாக அமெரிக்காவிற்குள் நுழைந்த பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் கதறி அழும் ஆடியோ ஒன்றை புரோபப்ளிகா (Propublica) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் 31-ம் தேதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 1940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களுடன் வந்த 1995 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

டொனால்ட் டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை மனிதநேயமற்ற செயல் என உலகளாவிய அளவில் எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கர்களில் பலரும் இதற்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், புரோபப்ளிகா  வெளியிட்ட அந்த ஆடியோ பதிவில் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டதால் அழும் குழந்தைகளை, அதிகாரிகள் சமாதானப்படுத்துகின்றனர். அதில், ஒரு அதிகாரி குழந்தைகள் மொத்தமாக அழுவதை கச்சேரி என கிண்டல் செய்கிறார். மேலும் அதை சரிசெய்ய சரியான நடத்துனர் இல்லை எனவும் கூறுகிறார்.

மேலும் ஒரு குழந்தை, அமெரிக்காவில் தனது உறவினர் இருப்பதாகவும், அவரிடம் தன்னை ஒப்படைக்குமாறும் கூறுகிறது. அதற்கு அதிகாரிகள் முதலில் காப்பகத்துக்கு சென்று அங்கிருந்து போன் மூலம் தொடர்புகொள்வோம் என சமாதானப்படுத்துகிறார்கள். அந்த ஆடியோ கேட்போர் மனதை கலங்க வைக்கும் வகையில் உள்ளது.  #USborderpolicy #Trump #VoiceofChildren

அந்த ஆடியோ பதிவை கீழே இருக்கும் வீடியோவை கிளிக் செய்யவும்.....

Tags:    

Similar News