செய்திகள்

2025ம் ஆண்டிற்குள் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்களாக இருக்கும் - ராம்நாத் கோவிந்த்

Published On 2018-06-18 08:21 GMT   |   Update On 2018-06-18 08:21 GMT
2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர்களாக உயர்த்தும் வகையில் அரசு முயற்சித்து வருவதாக ஜனாதிபதி ராம் நாத்கோவிந்த் தெரிவித்துள்ளார். #RamNathKovind #GDP
ஏதென்ஸ் :

கிரீஸ், சுரினேம் மற்றும் கியூபா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 16-ம் தேதி கிரீஸ் சென்றடைந்தார். அந்நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் உள்ள புலம்பெயர் இந்தியர்களிடையே இன்று உரையாற்றும்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

பழங்கால பண்பாடு மற்றும் கலச்சார கொள்கைகளை இந்தியா மற்றும் கிரீஸ் நாடுகள் இந்த உலகிற்கு வழங்கியுள்ளன. மிகவும் தொன்மையானதும் ஆழமானதுமான உறவு இவ்விரண்டு நாட்டுக்கும் இடையே நிலவுகின்றது. கிரேக்க வரலாற்று அறிஞர் மெகஸ்தேன்ஸ் ‘இண்டிகா’ எனும் புத்தகத்தின் வாயிலாக இந்தியாவை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவராவார்.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் சாதனைகளை பார்த்து நாங்கள் பெருமைப்படுகிறோம். தற்போது இந்தியாவில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் உகந்த சூழல் நிலவுகிறது. இதை பயன்படுத்தி தாய் நாட்டின் வளர்ச்சிக்காக புலம்பெயர் இந்தியர்கள் உதவுவார்கள் என நான் நம்புகிறேன்.

இந்தியாவின் வளர்ச்சி சீரான வேகத்தில் அதிகரித்து செல்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், வரும் 2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 5 டிரில்லியன் டாலர் எனும் அளவிற்கு இருக்கும். அதாவது உலகின் மூன்றாவது மிகப்பெரிய நுகர்வோர் சந்தையை உடைய நாடாக இந்தியாவை முன்னேற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தற்போதைய பொருளாதார மதிப்பு 2.5 டிரில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #RamNathKovind #GDP
Tags:    

Similar News