செய்திகள்

அணு ஆயுத திட்டங்களை முழுமையாக கைவிட சொன்னால் டிரம்புடன் பேச்சுவார்த்தை ரத்தாகும் - வடகொரியா மிரட்டல்

Published On 2018-05-16 05:37 GMT   |   Update On 2018-05-16 05:37 GMT
அணு ஆயுத திட்டத்தை முழுமையாக கைவிடும்படி அமெரிக்கா வலியுறுத்தினால் டிரம்புடன் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிடுவதாக வடகொரியா மிரட்டியுள்ளது. #KoreaThreatensUS #TrumpKimTalks
பியாங்யாங்:

அணு ஆயுத பரிசோதனைகள், ஏவுகணை சோதனைகளால் தொடர்ந்து சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தற்போது மற்ற நாடுகளுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க விரும்புகிறார். இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்றும் அறிவித்த அவர் கடந்த மாதம் தென்கொரியா அதிபர் மூன் ஜேஇன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தை உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்த கிம் முடிவு செய்தார். இந்த சந்திப்பு ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தென்கொரியாவில் நடைபெறும் அமெரிக்கா-தென்கொரியா ராணுவ ஒத்திகை வடகொரியாவை ஆத்திரம் அடையச் செய்துள்ளது. தென்கொரியா உடன் இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி வடகொரியா உடனான உறவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளது.

மேலும், அணு ஆயுத திட்டங்களை முழுமையாக கைவிட அமெரிக்க வலியுறுத்தினால் சிங்கப்பூரில் ஜூன் 12ல் நடக்க உள்ள டிரம்ப்- கிம் ஜாங் இடையிலான பேச்சுபேச்சுவார்த்தை ரத்தாகும் என வடகொரியா எச்சரித்துள்ளது. அமெரிக்காவுடன் பொருளாதார உறவு வைத்துக்கொள்ள மாட்டோம் என்றும் மிரட்டியுள்ளது.

அணு ஆயுத திட்டங்களை கைவிட்டால் அமெரிக்கா உரிய இழப்பீடு கொடுக்க முன்வந்திருப்பதை ஏற்க மாட்டோம். எங்களது பொருளாதார மேம்பாட்டிற்கு அமெரிக்காவின் எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை என வடகொரியா கூறியுள்ளது. இத்தகவலை வடகொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த விஷயத்தில் வடகொரியாவின் நிலைப்பாட்டை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தங்கள் கூட்டாளிகளுடன் உள்ள நெருக்கம் தொடரும் என்றும் வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு செயலாளர் செய்தி வெளியிட்டுள்ளார். #KoreaThreatensUS #TrumpKimTalks

Tags:    

Similar News