செய்திகள்

வாக்குறுதியை நிறைவேற்றிய மஹாதிர் - முன்னாள் எதிர்க்கட்சி தலைவருக்கு பொதுமன்னிப்பு

Published On 2018-05-11 09:48 GMT   |   Update On 2018-05-11 10:04 GMT
மலேசியாவில் பிரதமராக நேற்று பதவியேற்ற மஹாதிர் முகம்மது தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமை விடுவிக்க மன்னரிடம் அனுமதி பெற்றுள்ளார். #MahathirMohamad
கோலாலம்பூர்:

மலேசியாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுத்தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. 92 வயதான மஹாதிர் முகம்மது நேற்று பிரதமராக பொறுப்பேற்றார். இதன் மூலம் உலகின் மிக வயதான பிரதமர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள முன்னாள் துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் மஹாதிர் கூறியிருந்தார். அதன்படி, அன்வரை விடுவிப்பது தொடர்பாக இன்று மஹாதிர் தலைமையில் அந்நாட்டு மன்னர் சுல்தான் முகம்மதுவை சந்தித்து முக்கிய கட்சித்தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அன்வர் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி

பிரதமர் மஹாதிரின் கோரிக்கையை ஏற்ற மன்னர், அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்க சம்மதித்துள்ளார். இதனை மஹாதிர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அன்வர் இப்ராஹிமின் மக்கள் நீதி கட்சி மற்றும் மஹாதிரின் பிஎச் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

அன்வர் இப்ராஹிமின் மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயில் துணை பிரதமராக பதவியேற்றுள்ளார். அன்வர் இப்ராஹிம் விரைவில் சிறையிலிருந்து வெளிவரும் பட்சத்தில் முக்கிய பொறுப்பு அவருக்கு அளிக்க மஹாதிர் தயாராக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
Tags:    

Similar News