செய்திகள்

தலைமறைவாக உள்ள பாகிஸ்தான் முன்னாள் நிதிமந்திரியின் எம்.பி. பதவி ரத்து - சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Published On 2018-05-08 12:52 GMT   |   Update On 2018-05-08 12:52 GMT
தலைமறைவாக உள்ள பாகிஸ்தான் முன்னாள் நிதிமந்திரி இஷாக் தாரின் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர் பதவியை அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. #pakistansupremecourt #IshaqDar
இஸ்லாமாபாத்:

பனாமா கேட் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷெரிப் மற்றும் நிதிமந்தி இஷாக் தார் (67) ஆகியோரை அவர்களின் பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்து அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இஷாக் தார் மீதான ஊழல் வழக்குகளின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் லண்டனில் தங்கியுள்ள அவர், பல முறை சம்மன்கள் அனுப்பப்பட்டும் விசாரணையில் ஆஜராகாமல் இருந்து வருகிறார். இதனால் இஷாக் தாரை  சுப்ரீம் கோர்ட் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் பாரளுமன்ற மேல்சபையில் காலியாக இருந்த இடத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட இஷாக் தார் 155 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், இஷாக் தார் மீதான் ஊழல் வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது இஷாக் தார் ஆஜராக வில்லை. அவரது சார்பில் ஆஜரான் வக்கீல் இஷாக் தார் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்பதை நிரூபிக்க தேவையான மருத்துவ அறிக்கைகளை கோர்ட்டில் சமர்பித்தார்.

இதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி இஜாசுல் அஹ்சான், இஷாக் தாரின் வக்கீல் மீது கேள்விக்கணைகளை தொடுத்தார். நாங்கள் எப்போது கோர்ட்டுக்கு அழைத்தாலும் அவர்க்கு உடல் நிலை சரியில்லை என கூறுகிறீர்கள். ஆனால் லண்டனில் இருந்த படி தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளிக்கும் அவர் நன்றாக இருப்பதாகவே தெரிகிறது என்று கூறினார்.

இதையடுத்து, இஷாக் தாரின் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர் பதவியை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். #pakistansupremecourt #IshaqDar
Tags:    

Similar News