செய்திகள்

ஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசிய ஈராக் பத்திரிகையாளர் அதிபர் தேர்தலில் போட்டி

Published On 2018-05-06 06:06 GMT   |   Update On 2018-05-06 06:06 GMT
2008-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ் மீது இரண்டு ஷுக்களை வீசி சிறை தண்டனை அனுபவித்த ஈராக் பத்திரிகையாளர் மண்டேசர் அல்-ஸைதி அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். #Iraq
பாக்தாத்:

2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் தனது கடைசி பயணமாக ஈராக் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். பாக்தாத் நகரில் ஈராக் அதிபருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து புஷ் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஈராக்கிய பத்திரிகையாளர் மண்டேசர் அல்-ஸைதி திடீரென எழுந்து தனது ஷூக்களை கழற்றி புஷ்-ஐ குறிவைத்து வீசினார்.

புஷ் கீழே குனிந்து தாக்குதலில் இருந்து தப்பிவிட்டார். இந்த சம்பவம் அப்போது உலகமெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. ஈராக்கில் நடக்கும் எல்லா சீரழிவுக்கும் புஷ்தான் காரணம் என்பதால் ஷூவை வீசினேன் என அல்-ஸைதி தெரிவித்திருந்தார். எனினும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


மண்டேசர் அல்-ஸைதி

நன்னடத்தை காரணமாக 9 மாதங்களில் அல்-ஸைதி விடுவிக்கப்பட்டார். இதன் பின்னர், அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் சேர்ந்தது. இந்நிலையில், வரும் 12-ம் தேதி நடக்க உள்ள ஈராக் பாராளுமன்ற தேர்தலில் அல்-ஸைதி போட்டியிட உள்ளார். 

கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சாத்ர் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்கியுள்ள அல்-ஸைதி, “திருட்டு அரசியல்வாதிகளை சிறையில் தள்ளுவதுதான் எனது இலக்கு. அப்போதுதான் நாடு வளம் பெறும்” என தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News