செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் சிக்கிய மாவட்டத்தை ராணுவம் மீட்டது

Published On 2018-05-05 15:27 GMT   |   Update On 2018-05-05 15:27 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் தலிபான் பயங்கரவாதிகளிடம் சிக்கிய கனிம வளங்கள் நிறைந்த கோகிஸ்தான் மாவட்டத்தை ராணுவம் இன்று மீட்டது.#Afghanforces #retakeKohistandistrict
காபுல்:

ஆப்கானிஸ்தானில் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட பின்னர், தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. நாட்டின் சில பகுதிகளை தங்கள் வசம் பிடித்துவைத்துள்ள தலிபான்கள் போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள பதக்‌ஷான் மாகணத்தின் கோகிஸ்தான் மாவட்டத்துக்குள் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த வியாழக்கிழமை துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். அங்கிருந்த சோதனைச் சாவடிகள், மற்றும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

பயங்கரவாதிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாத பாதுகாப்பு படையினர் உயிருக்கு பயந்து தப்பியோடினர். சிலர் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சுமார் 20 வீரர்கள் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் கனிம வளங்கள் நிறைந்த கோகிஸ்தான் மாவட்டத்தை தலிபான்கள் கைப்பற்றியதன் மூலம், இப்பகுதியில் மட்டும் 3 மாவட்டங்கள் இவர்களிடம் சிக்கி இருந்தன.

இந்நிலையில், இப்பகுதியை மீட்பதற்காக கூடுதலாக ராணுவப் படைகள் இன்று கோகிஸ்தான் மாவட்டத்துக்குள் புகுந்தன. அங்கு இருதரப்பினருக்கும் நடைபெற்ற மோதலில் அந்த மாவட்டம் மீட்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.#Afghanforces #retakeKohistandistrict
Tags:    

Similar News