செய்திகள்

பாக். அரசுக்கு சோதனை மேல் சோதனை - இக்வாமா புகாரில் வெளியுறவு மந்திரி தகுதிநீக்கம்

Published On 2018-04-26 10:09 GMT   |   Update On 2018-04-26 10:29 GMT
பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரியாக உள்ள ஹவாஜா ஆசிப், ஐக்கிய அமீரக நாட்டின் பணி அனுமதி ‘இக்வாமா’ வைத்திருந்த புகாரில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். #KhawajaAsif
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரியாக உள்ள ஹவாஜா ஆசிப் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் என்.ஏ-110 தொகுதியில் போட்டியிட்டு வென்று தேசிய சபைக்கு சென்றார். அவரை எதிர்த்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த உஸ்மான் தார் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இக்வாமா எனப்படும் ஐக்கிய அமீரக நாட்டின் பணி அனுமதி (work permit) ஆசிப்பிடம் இருக்கிறது. ஆனால், அவர் வேட்புமனுவில் அதனை மறைத்துள்ளார் எனவே ஆசிப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உஸ்மான் தார் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. ஹவாஜா ஆசிப் இக்வாமா வைத்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அதன் விபரங்களை வேட்புமனுவில் மறைத்துள்ளார். எனவே, அவர் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால், அவர் தனது பதவியை இழந்துள்ளார்.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியை அதிரச்செய்துள்ளது. ஏற்கனவே, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், நிதி மந்திரி ஆகியோர் பணாமா லீக் விவகாரத்தில் தங்களது பதவியை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #KhawajaAsif 
Tags:    

Similar News