செய்திகள்

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் வேண்டாம் - மோடி வேண்டுகோள்

Published On 2018-04-19 04:39 GMT   |   Update On 2018-04-19 04:39 GMT
பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கதுவா சம்பவம் பற்றி பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
லண்டன்:

பிரிட்டன் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, லண்டனில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசினார். அப்போது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கதுவா பாலியல் வன்கொடுமை பற்றியும் தனது கருத்தை முன்வைத்தார்.  

அவர் பேசும்போது, “குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் போது, நாம் கடந்த கால அரசாங்கத்தின் போது நடைபெற்ற  எண்ணிக்கையோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது. பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் வன்கொடுமைதான். இதை எவ்வாறு நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும்? இப்பிரச்சினையில் அரசியல் செய்யக்கூடாது.

சமீப கால பாலியல் தாக்குதல்கள் இந்தியாவை அவமானப்பட  வைக்கும் செயல் ஆகும். நமது நாட்டில் ஒவ்வொரு முறையும், பெண்களே கேள்விக்குள்ளாக்கப்படுகின்றனர். இதுபோன்ற குற்றங்களை செய்யும் ஆணும் யாரோ ஒருவரின் மகன் தான். நமது மகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படுவது  கவலை அளிக்கக்கூடியது மட்டும் அல்லாமல் தேசத்துக்கே அவமானம் தரக்கூடியது” என்றார்.

முன்னதாக, லண்டன் சென்ற பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் கையில் பதாகைகளை ஏந்தியபடி எதிர்ப்பு தெரிவித்தனர். கதுவாவில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம் இடம் பெற்று இருந்த பதாகைகளை ஏந்தியபடி மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். #tamilnews
Tags:    

Similar News