செய்திகள்

ஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் அதிபர் மேல்முறையீட்டின்போது வெளியில் இருக்க சுப்ரீம்கோர்ட்டு அனுமதி மறுப்பு

Published On 2018-04-05 19:52 GMT   |   Update On 2018-04-05 19:52 GMT
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பிரேசில் முன்னாள் அதிபர் லுலா சிறைக்கு செல்லவேண்டியது உறுதிஆனது. மேல்முறையீட்டின்போது வெளியே இருக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளிக்க மறுத்து விட்டது. #Brazil #Ex-Presient #Lula
பிரேசிலியா:

பிரேசில் நாட்டில் சாதாரண தொழிலாளியாக இருந்து, தொழிற்சங்க தலைவராகி பின்னர் அந்த நாட்டின் அதிபர் ஆக உயர்ந்தவர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (வயது 72).

இவர் அந்த நாட்டில் 2003-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தொடர்ந்து 2 முறை அதிபர் பதவி வகித்தார்.

அதுமட்டுமின்றி, 50 ஆண்டு காலத்தில் அதிபர் பதவிக்கு வந்த முதல் இடதுசாரித்தலைவர் என்ற பெயரையும் அவர் அங்கு பெற்றார். அவரது ஆட்சிக்காலத்தில் பொருளாதார முன்னேற்றம் காணப்பட்டது. கோடிக்கணக்கானோர் வறுமைக்கோட்டுக்கு வெளியே வந்தனர்.

ஆனால் அப்படிப்பட்ட லுலாவும், அரசு எண்ணெய் நிறுவனத்தின் பணி ஒப்பந்தம் அளிப்பதற்காக ஒரு என்ஜினீயரிங் கம்பெனியிடம் இருந்து ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ. 6½ கோடி) லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் குற்றவாளி என கண்டு, 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தீர்ப்பு அளித்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்து அவர் அப்பீல் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த அப்பீல் கோர்ட்டு, அவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனையை 12 ஆண்டுகளாக உயர்த்தி சென்ற ஜனவரி மாதம் தீர்ப்பு அளித்தது.

இந்தநிலையில் அவர் இந்த தீர்ப்பையும் எதிர்த்து மேல் முறையீடு செய்ய தீர்மானித்தார். இதன் காரணமாக, மேல்முறையீடு காலத்தில் தான் சிறையில் அடைக்கப்படாமல் வெளியே இருக்க அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார்.

அதில் நேற்று அவருக்கு எதிராக தீர்ப்பு வந்து விட்டது. அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தீர்மானிப்பதற்கான ஓட்டை ரோசா வெப்பர் என்ற பெண் நீதிபதி போட்டார். இதன் காரணமாக லுலா சிறைக்கு செல்வது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அவர் ஒரு வார காலத்திற்குள் சிறைக்கு செல்வது உறுதியாகி உள்ளது.

இதனால் அவரது அரசியல் வாழ்வும் அஸ்தமனம் அடைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசிலில் வரும் அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் லுலா போட்டியிட இருந்தார். கருத்துக்கணிப்புகளிலும் அவர் பெரும்பான்மை ஆதரவுடன் முன்னணியில் இருந்தார்.

ஆனால் இப்போது அவர் சிறை செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டதால், அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.  #Brazil #Ex-Presient #Lula #tamilnews 
Tags:    

Similar News