செய்திகள்

மாலத்தீவில் நெருக்கடி நிலையை ரத்து செய்தார் அதிபர் அப்துல்லா யாமீன்

Published On 2018-03-22 13:10 GMT   |   Update On 2018-03-22 13:10 GMT
மாலத்தீவில் கடந்த 45 நாட்களாக அமலில் இருந்த நெருக்கடி நிலை திரும்ப பெறப்படுவதாக அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளார்.
மாலே:

மாலத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட 9 அரசியல் தலைவர்களை விடுதலை செய்யவும், மாலத்தீவு முன்னேற்ற கட்சியின் 12 எம்.பி.க்களை அதிபர் யாமீன் அப்துல் கயூம் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று அறிவித்தும் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் உத்தரவிட்டது.

கோர்ட் உத்தரவால் தனது பதவிக்கு ஆபத்து என்பதால் 15 நாட்கள் நெருக்கடி நிலையை அமல்படுத்திய அதிபர் யாமீன் அப்துல் கயூம், தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீத் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

பின்னர் சுப்ரீம் கோர்ட்டின் எஞ்சிய நீதிபதிகள், முந்தைய உத்தரவுகளை ரத்து செய்தனர். இதனை அடுத்து, பாராளுமன்ற ஒப்புதலுடன் நெருக்கடி நிலை மேலும் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

முன்னாள் அதிபர் முகமது நஷீத், நீதிபதிகள் அப்துல்லா சயீத், அலி ஹமீத் உள்ளிட்ட 4 எம்.பி.க்கள், முன்னாள் போலீஸ் கமிஷனர் உள்பட 9 பேர் மீது அங்கு உள்ள குற்றவியல் கோர்ட்டில் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. நீதிபதிகள் அப்துல்லா சயீத், அலி ஹமீத் மற்றும் இன்னொரு நீதிபதி என 3 பேர் அரசை கவிழ்ப்பதற்காக லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 45 நாட்களாக நீடித்து வந்த அவசரகாலச்சட்டத்தினை நீக்கிய அதிபர் அப்துல்லா யாமீன் இன்றுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என அறிவித்தார். #TamilNews
Tags:    

Similar News