செய்திகள்

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் கட்சிக்கு அங்கீகாரம்

Published On 2018-03-10 03:47 GMT   |   Update On 2018-03-10 03:47 GMT
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் கட்சியை அங்கீகரித்து பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு பாகிஸ்தான் கோர்ட்டு உத்தரவிட்டது.
இஸ்லாமாபாத்:

இந்தியாவின் நிதித் தலைநகரம் என்ற சிறப்புக்கு உரிய மும்பையில் 2008-ம் ஆண்டு, நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் நுழைந்து, கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 166 பேர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை, பாகிஸ்தானில் இருந்து மூளையாக செயல்பட்டு வழிநடத்தியவர், சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத். இவர்தான், லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் நிறுவனர்.

இவர் மில்லி முஸ்லிம் லீக் (எம்.எம்.எல்.) என்ற அரசியல் கட்சியை தொடங்கியதுடன், அங்கு விரைவில் நடக்க உள்ள நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். ஆனால் பாகிஸ்தான் அரசின் எதிர்ப்பு காரணமாக, மில்லி முஸ்லிம் லீக் கட்சியை அங்கீகரித்து பதிவு செய்ய அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது.

இதை எதிர்த்து இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மில்லி முஸ்லிம் லீக் கட்சி மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதி அமர் பரூக் விசாரித்தார். விசாரணையின் முடிவில், மில்லி முஸ்லிம் லீக் கட்சிக்கு அங்கீகாரம் அளிக்க மறுத்த தேர்தல் கமிஷனின் முடிவு நிராகரிக்கப்பட்டது.

மேலும், ஹபீஸ் சயீத் தரப்பினை கேட்டு, அவரது கட்சியை அங்கீகரித்து பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் தேர்தல் கமிஷனுக்கு நீதிபதி அமர் பரூக் உத்தரவிட்டார்.

ஏற்கனவே ஹபீஸ் சயீத்தை அடுத்த மாதம் ஏப்ரல் 4-ந் தேதி வரை கைது செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த உத்தரவுகளும் அவருக்கு சாதகமாக அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News