செய்திகள்

இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளி தொழில் அதிபர் திறன் தூதராக நியமனம்

Published On 2018-03-09 03:40 GMT   |   Update On 2018-03-09 03:40 GMT
இங்கிலாந்து நாட்டில் தொழில் துறை மாணவர்கள் திட்டத்தின் அதிகாரபூர்வ திறன் தூதராக இந்திய வம்சாவளியை நியமித்து, இளவரசர் சார்லஸ் உத்தரவிட்டு உள்ளார்.
லண்டன்:

இங்கிலாந்து வாழ் இந்திய வம்சாவளி சஞ்சீவ் குப்தா. இவர் அங்கு உருக்கு தொழில் அதிபராக உள்ளார். ஜிஎப்ஜி அலையன்சின் நிர்வாக தலைவராகவும் இருந்து வருகிறார்.

இவரை தொழில் துறை மாணவர்கள் திட்டத்தின் அதிகாரபூர்வ திறன் தூதராக நியமித்து, இளவரசர் சார்லஸ் உத்தரவிட்டு உள்ளார்.

தொழில் துறை மாணவர்கள் திட்டம், மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டு உள்ளது. படிக்கிற காலத்திலேயே அவர்கள் தொழில் துறை பயிற்சியும், அனுபவமும் பெற துணை நிற்கிறது.

இங்கிலாந்து முழுவதும் 15 ஆயிரம் இளைஞர்களுக்கு இந்த திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை 7 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கியவர், இளவரசர் சார்லஸ்தான்.

இது தொடர்பாக இளவரசர் சார்லஸ் கூறும்போது, “சஞ்சீவ் குப்தா தனது ஜிஎப்ஜி அலையன்ஸ் மூலமாக நமது நாட்டின் கனரக தொழில்களுக்கு உண்மையான கற்பனை, புதுமையான சிந்தனை மற்றும் நிலையான மறு சீரமைப்பு ஆகியவற்றை பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு உள்ளார்” என புகழாரம் சூட்டினார்.

இந்த நியமனத்துக்கு சஞ்சீவ் குப்தா மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “நான் தொழில் அதிபர்கள் குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறேன். நான் வளர்ந்து வந்தபோது உருக்கு தொழில், பொறியியல் நிறுவனங்களில் கூடுதல் நேரம் ஒதுக்கி, அவற்றுடன் வளர்ந்து வருகிற வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுதான் தொழில்துறையில் என்னை முக்கிய பங்கு வகிக்க வைத்தது. இதைத்தான் தொழில்துறை மாணவர்கள் திட்டமும், நிறைவேற்றுகிறது” என பெருமிதத்துடன் கூறினார்.



ஜிஎப்ஜி அலையன்ஸ் நிறுவனங்கள், இங்கிலாந்தில் உள்ள 26 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 1,300 பேருக்கு ஆதரவு அளித்து வருகிறது. அடுத்த ஆண்டு 5 ஆயிரம் மாணவர்களுக்கு ஆதரவு அளிக்க திட்டமிட்டு உள்ளது. #tamilnews
Tags:    

Similar News