செய்திகள்

அமெரிக்க பள்ளி துப்பாக்கிச்சூட்டில் மாணவர்களை காப்பாற்றிய இந்திய ஆசிரியை

Published On 2018-02-17 22:36 GMT   |   Update On 2018-02-17 22:36 GMT
அமெரிக்க பள்ளி துப்பாக்கிச்சூட்டில் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு, தனது வகுப்பு மாணவ, மாணவிகளை காப்பாற்றிய ஆசிரியை சாந்தி விஸ்வநாதனை, மாணவ, மாணவிகளின் பெற்றோர் மனம் திறந்து பாராட்டினர். #FloridaSchoolShooting
வாஷிங்டன்:

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பார்க்லேண்ட் நகர் மெர்ஜாரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப்பள்ளியில் 14-ந்தேதி மதியம் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 பேர் பலியாகினர். இந்த சம்பவம், அமெரிக்காவை உலுக்கி உள்ளது.

அந்தப் பள்ளியில் இந்தியாவை சேர்ந்த சாந்தி விஸ்வநாதன் கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தின்போது இரண்டாவது முறை எச்சரிக்கை மணி ஒலித்தபோது, ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை புரிந்துகொண்ட ஆசிரியை சாந்தி விஸ்வநாதன், உடனடியாக தனது வகுப்பு அறைக்கதவையும், ஜன்னல்களையும் பூட்டி விட்டார். ஜன்னல் கண்ணாடிகளை பேப்பர் கொண்டு மறைத்தார்.



துப்பாக்கிச்சூடு நடத்திக்கொண்டிருந்த நிக்கோலஸ் குரூசின் கண்களுக்கு தன் வகுப்பு மாணவ, மாணவிகள் பட்டுவிடக்கூடாது என்பதில் அவர் கண்ணும், கருத்துமாக செயல்பட்டார். மாணவ, மாணவிகளை தரையில் பதுங்க வைத்தார்.

சம்பவத்தை தொடர்ந்து ‘ஸ்வாட்’ என்னும் அதிரடிப்படை போலீசார் வந்து, அந்த வகுப்பு அறை கதவைத் தட்டியபோது, சாந்தி விஸ்வநாதன், பயங்கரவாதிதான் போலீஸ் போல வந்து பேசி கதவைத் தட்டுவதாக கருதினார்.

“முடிந்தால் கதவை உடைத்துப்பாருங்கள் அல்லது சாவி கொண்டு வந்து திறந்து பாருங்கள். நான் கதவைத் திறக்கமாட்டேன்” என்று கூறி விட்டார்.

எச்சரிக்கை மணி 2 முறை ஒலித்த உடனேயே விபரீதத்தை புரிந்து, புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு, தனது வகுப்பு மாணவ, மாணவிகளை காப்பாற்றிய ஆசிரியை சாந்தி விஸ்வநாதனை, மாணவ, மாணவிகளின் பெற்றோர் மனம் திறந்து பாராட்டினர்.

இதுபற்றி அங்கு வெளியாகிற ‘சன் சென்டினல்’ நாளேடும் செய்தி வெளியிட்டு, பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.  #FloridaSchoolShooting
Tags:    

Similar News