செய்திகள்

எனது பதவிக்கு ஆபத்து இல்லை: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேட்டி

Published On 2018-02-16 14:17 GMT   |   Update On 2018-02-16 14:17 GMT
எனது ஆட்சிக்கு ஆபத்து இல்லை. பிரதமராக தொடர்ந்து நீடிப்பேன் என்று ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். #ranilvikramasimha
கொழும்பு:

இலங்கையில் உள்ளாட்சி பதவிகளுக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனா கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 341 இடங்களில் 240-க்கும் அதிகமான இடங்களில் ராஜபக்சே கட்சிக்கூட்டணி வென்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, கடந்த தேர்தலை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. தனது வலுவான களங்களான கொழும்பு பிரதேசத்தில் பல இடங்களை பெரமுனா கூட்டணியிடம் இழந்தது. இந்த வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள மகிந்த ராஜபக்சே, “சிறிசேனா தலைமையை மக்கள் ஏற்கவில்லை. இனியும் இந்த அரசு தொடரக்கூடாது என மக்கள் தீர்ப்பளித்து விட்டனர்” என பேட்டியளித்தார்.

மேலும், பாராளுமன்றத்திற்கு உடனே தேர்தல் நடத்திட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இதற்கிடையே, ரணில் விக்கிரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு நிமல் சிறிபாலா டி செல்வா என்பவரை பிரதமராக்க வேண்டும் என இலங்கை சுதந்திரா கட்சியில் குரல் எழுந்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக அந்நாட்டின் அட்டார்னி ஜெனரலிடம் அதிபர் மைத்ரிபாலா ஆலோசனை கேட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த எதிர்ப்பு குரல் தொடர்பாக இதுநாள்வரை அமைதி காத்துவந்த ரணில் விக்கிரமசிங்கே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ராஜபக்சேவின் வலியுறுத்தல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘என்னைப் பொருத்தவரை பிரதமர் பதவியில் நான் தொடர்ந்து நீடிப்பேன்’ என்று தெரிவித்தார்.

இலங்கை நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட சட்டதிருத்ததின்படி, அந்நாட்டின் அதிபர் தாமாக முன்வந்து ராஜினாமா செய்தாலோ, அல்லது, பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தாலோ மட்டும்தான் அவர் பதவி விலக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews #ranilvikramasimha
Tags:    

Similar News