செய்திகள்

இந்தியாவுடன் போர் கிடையாது - பாகிஸ்தான் பிரதமர் சூசகம்

Published On 2018-01-18 00:17 GMT   |   Update On 2018-01-18 00:17 GMT
பாகிஸ்தான் ஒருபோதும் வலியப்போய் தாக்குதல்கள் நடத்தாது எனவும் எப்போதுமே பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாசி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

இந்தியாவில் பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து, முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்துவதற்கு பக்க பலமாக இருந்து வருகிறது. எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்து மீறிய தாக்குதல்களில் ஈடுபட்டும் வருகிறது. இதன் காரணமாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாசி, அங்கு உள்ள டி.வி. சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம், இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், “அரசு உத்தரவிட்டால் எல்லை தாண்டிச்சென்று எந்த ஒரு தாக்குதலையும் நடத்தத் தயார்?” என கூறி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் இந்தியாவுடன் பாகிஸ்தான் போர் புரிவதற்கான வாய்ப்பை சூசகமாக நிராகரித்தார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “பாகிஸ்தான் ஒருபோதும் வலியப்போய் தாக்குதல்கள் நடத்தாது. எப்போதுமே பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது. ஆனால் காஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்து கொள்ளாமல், மரியாதையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை அமைய வேண்டும்” என்று குறிப்பிட்டார். மேலும், “இந்தியாவுக்கு பல நோக்கங்கள் இருக்கலாம். ஆனால் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு நிலவரத்தை உணர வேண்டும்” என்றும் கூறினார்.

பாகிஸ்தானில் உள்ள 30 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் நாடு திரும்புவதற்கு உலக நாடுகள் உதவவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

5 ஆண்டு கால சிறப்பான ஆட்சி செயல் பாடுகள், முன் எப்போதும் இல்லாத வகையில் அமைந்த வளர்ச்சிப்பணிகள் அடிப்படையில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலை சந்திப்போம் என்றும் அவர் கூறினார். 
Tags:    

Similar News