செய்திகள்

உடல் எடையை தவிர மற்ற மருத்துவ பரிசோதனையில் டிரம்ப் தேறி விட்டார்: வெள்ளை மாளிகை

Published On 2018-01-17 00:28 GMT   |   Update On 2018-01-17 00:28 GMT
அதிபராக தொடர்வதற்கு டிரம்ப் போதிய மனநிலையில் இல்லை என சர்ச்சை புத்தகம் வெளியான நிலையில், முதன் முறையாக அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்துள்ளன.
வாஷிங்டன்:

அதிபராக தொடர்வதற்கு டிரம்ப் போதிய மனநிலையில் இல்லை என சர்ச்சை புத்தகம் வெளியான நிலையில், முதன் முறையாக அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்துள்ளன.

அமெரிக்காவில் மைக்கேல் வோல்ப் என்பவர் எழுதிய ‘பயர் அண்ட் ப்யூனி: இன்சைட் தி டிரம்ப் வொயிட் ஹவுஸ்’ என்ற புத்தகத்தில், டிரம்ப்பின் மனநிலை குறித்து பல கேள்விகளை ஆசிரியர் எழுப்பியிருந்தார். அதிபராக தொடர்வதற்கு தேவையான மனநிலையை அவர் கொண்டுள்ளாரா? என்றும் கேட்டு இருந்தார்.

கூறியதையே திரும்பத் திரும்பக் கூறுவது குறுகிய கால நினைவாற்றல் உள்ளிட்ட காரணங்களால் டிரம்ப் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தகத்தில் கூறிய வோல்ப், "முன்பெல்லாம் கூறியதையே, வார்த்தை மாறாமல் 30 நிமிடங்களுக்குள் மீண்டும் கூறிவந்த டிரம்ப், தற்போது அதை 10 நிமிடங்களுக்குள் செய்கிறார்," என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இதற்கான எந்த ஆதாரத்தையும் வோல்ப் முன்வைக்கவில்லை. புத்தகம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோசடி மற்றும் பொய்களால் நிரம்பிய இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியர் பொய்யர் என டிரம்ப் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், அதிபராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக டிரம்ப்புக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்துள்ளன. வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவராக இருக்கும் ரோனி ஜாக்சன் பரிசோதனை அறிக்கையை நேற்று வெளியிட்டார். எல்லா சோதனையிலும் டிரம்ப் தகுதி பெற்றுள்ளதாக கூறிய அவர், 4 முதல் 7 கிலோ வரையில் உடல் எடையை மட்டும் டிரம்ப் குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News