செய்திகள்

கிரீஸ் நாட்டில் கனமழை - வெள்ளப்பெருக்கு: 14 பேர் உயிரிழப்பு

Published On 2017-11-16 05:42 GMT   |   Update On 2017-11-16 05:42 GMT
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
ஏதென்ஸ்:

கிரீஸ் நாட்டில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டுள்ளன.



சைமி தீவில் தொடர்ந்து பெய்த தொடர் மழையால் வீடுகள், கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வாகனங்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.



இந்நிலையில்,  ஏதென்ஸ் புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் திடீரென கனமழை பெய்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  எனவே, உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த உயிரிழப்பு குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஜ், இது தேசிய துக்க நாள் என அறிவித்தார்.

இன்றும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
Tags:    

Similar News