செய்திகள்

ஈரான் - ஈராக் எல்லைப்பகுதி நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 328 ஆக உயர்வு

Published On 2017-11-13 08:32 GMT   |   Update On 2017-11-13 08:57 GMT
ஈரான் - ஈராக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 328 ஆக உயர்ந்தது.
பாக்தாத்:

ஈரான் மற்றும் ஈராக் இடையேயான எல்லைப்பகுதியில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் குவிந்தனர். பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள வளைகுடா நாடுகளில் உணரப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்று இடிபாடுகளுக்கு இடையில் சிக்கித்தவித்த பலரை உயிருடன் மீட்டனர்.



சில இடங்களில் மீட்புப் பணிகள் இன்றும் நடைபெற்றுவரும் நிலையில் நேற்றைய நிலநடுக்கத்தின் விளைவாக இரு நாடுகளிலும் 328 பேர் உயிரிழந்ததாகவும், ஈரான் நாட்டு மலையோரப் பகுதிகளில் மட்டும் சுமார் 2500 பேர் காயம் அடைந்ததாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags:    

Similar News