செய்திகள்

ஈரான்-ஈராக்கில் கடும் பூகம்பம்: 135 பேர் உயிரிழப்பு

Published On 2017-11-13 03:09 GMT   |   Update On 2017-11-13 03:10 GMT
ஈரான், ஈராக் நாடுகளில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 135 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
தெஹ்ரான்:

ஈரான் மற்றும் ஈராக் இடையேயான எல்லைப்பகுதியில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 32 கி.மீ. தொலைவில், ஈரான் பகுதிக்குட்பட்ட கெர்மன்ஷா மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக இரு நாடுகளிலும் எல்லைப்பகுதிகள் கடுமையாக குலுங்கின.  பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஒன்று திரண்டனர். சில கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. கட்டிட இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர்.

இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஈரானின் வடமேற்கு, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.



இந்த நில நடுக்கத்தினால் இரு நாடுகளிலும் சுமார் 135 பேர் இறந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கெர்மன்ஷா மாகாணத்தில் மட்டும் 120-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. ஈராக்கில் 4 பேர் பலியானதாகவும், 50 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் குர்திஷ் சுகாதாரத்றை அதிகாரிகள் கூறுகின்றனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் முழுவீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News