செய்திகள்

எந்த நேரத்திலும் அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம்: வடகொரியா எச்சரிக்கை

Published On 2017-10-19 08:37 GMT   |   Update On 2017-10-19 08:37 GMT
எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்று வடகொரியாவின் ஐ.நா.சபைக்கான துணை தூதர் தெரிவித்துள்ளார்.
பியாங்யாங்:

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தி வருகிறது. அதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐ.நா.சபை மூலம் வடகொரியாவுக்கு பொருளாதார தடை விதித்துள்ளன.

மேலும், வடகொரியாவை அச்சுறுத்தும் வகையில் கொரிய தீபகற்ப கடற்பகுதியில் தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு வடகொரியாவின் ஐ.நா.சபைக்கான துணை தூதர் கிம் இன்ரியாங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐ.நா.சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது கடந்த 1970-ம் ஆண்டுகளில் இருந்து வடகொரியா மீது மட்டுமே அமெரிக்கா நேரடியாக அணு ஆயுத தாக்குதல் மிரட்டல் விடுத்து வருகிறது.

நாட்டின் பாதுகாப்புக்காகவே வடகொரியா அணு ஆயுதங்கள் தயாரித்து வைத்துள்ளது. ஆண்டுதோறும் நாங்கள் (வட கொரியா) அணு ஆயுதங்கள் மூலம் ராணுவ பயிற்சி மேற்கொள்கிறோம்.

ஆனால் அமெரிக்கா கூறுவது போன்று எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. எங்களின் சக்தி வாய்ந்த தலைவரை (கிம் ஜாங் உன்) அகற்ற அமெரிக்கா ரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்காவின் முக்கிய பகுதி வடகொரியாவின் ஏவுகணை கண்காணிப்பில் உள்ளது. மதிப்பிற்குரிய புனிதமான எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் எங்களது கடுமையான தாக்குதலில் இருந்து அந்நாடு தப்பிக்க முடியாது.

அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்துவோம். அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம்” என எச்சரித்தார்.

Tags:    

Similar News