செய்திகள்

மியான்மர் கலவர பகுதியில் குண்டுவெடிப்பு- தீவைப்பு 20 வீடுகள் எரிந்தன

Published On 2017-09-23 14:25 GMT   |   Update On 2017-09-23 14:25 GMT
மியான்மரில் கலவரங்கள் நடந்துவரும் ராக்கின் மாகாணத்தில் நேற்றிரவு மீண்டும் வீடுகளுக்கு 20 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது.

யன்கன்:

மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ரோகிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. அதனால் ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதனால் பலர் உயிரிழந்தனர். வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டது.

இதனால் அகதிகளாக வெளியேறிய 3 லட்சத் துக்கும் மேற்பட்ட மக்கள் அண்டை நாடான வங்காள தேசத்தில் தஞ்சம் அடைந் துள்ளனர். இருந்தும் அங்கு கலவரம் ஓயவில்லை. நேற்று ராக்கின் மாகாணத்தில் மீண்டும் குண்டு வெடிப்பு மற்றும் தீவைப்பு சம்பவங்கள் நடந்தன.

மயுங்கா இயான் சங் என்ற கிராமத்தில் இரவில் புகுந்த ஒரு கும்பல் தீவைத்தது. அப்போது அங்கு தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி தப்பினர். அதில் 20 வீடுகள் எரிந்து சாம்பலாயின.

அன்று காலை புகிடாங் நகரம் அருகே மிசங் ஷே என்ற கிராமத்தில் பள்ளி வாசல் அருகே ஒரு குண்டு வெடித்தது. அதில் ஏற்பட்ட சேத விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

வங்கதேச எல்லையில் ராணுவம் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சாங்- சூகி உத்தரவிட்டிருந்தார். அதன் பின்னர் தான் இத்தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News