செய்திகள்

தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 39 இந்திய தொழிலாளர்களின் கதி என்ன என்று தெரியவில்லை: ஈராக் பிரதமர் அறிவிப்பு

Published On 2017-09-18 00:29 GMT   |   Update On 2017-09-18 00:29 GMT
தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 39 இந்திய தொழிலாளர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை என ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பாக்தாத்:

ஈராக்கில் உள்ள மொசூல் நகரம் கடந்த 2014-ம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்த போது, அந்த பகுதியில் பணிபுரிந்த இந்திய தொழிலாளர்கள் 39 பேர் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கடத்திச் சென்று இருக்கலாம் என்று தகவல் வெளியானது.

ஈராக் ராணுவத்துக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் நடந்த 9 மாத சண்டைக்கு பிறகு, கடந்த ஜூலை மாதம் மொசூல் நகரம் அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால் கடத்திச் செல்லப்பட்ட இந்திய தொழிலாளர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

இந்தநிலையில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ஜூலை மாதம் தன்னை சந்தித்த இந்திய தொழிலாளர்களின் உறவினர்களிடம், ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்திய தொழிலாளர்களும் பத்திரமாக இருக்கலாம் என கருதுவதாகவும், அவர்கள் மொசூல் அருகேயுள்ள பதுஷ் சிறையில் சிறைவைக்கப்பட்டு இருக்கக்கூடும் என்றும் கூறினார். ஆனால் அதன்பிறகு அவர்களை பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில், “தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 39 இந்திய தொழிலாளர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அதுபற்றி மேலும் விசாரித்து வருகிறோம். தற்போதைய நிலையில் மேற்கொண்டு எதுவும் தெரிவிக்க இயலாது” என்று கூறினார். 
Tags:    

Similar News