செய்திகள்

இலங்கை சுற்றுலாத்துறை துணை மந்திரி அதிரடி நீக்கம்: அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவு

Published On 2017-09-12 11:36 GMT   |   Update On 2017-09-12 15:15 GMT
கட்சியின் கட்டளையை மீறியதற்காக இலங்கை நாட்டின் சுற்றுலாத்துறை துணை மந்திரியை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பதவி நீக்கம் செய்துள்ளார்.
கொழும்பு:

இலங்கையில் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவின் தலைமையிலான இலங்கை சுதந்திர கட்சி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டாட்சி நடைபெற்று வருகிறது. இலங்கை சுதந்திர கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள ஏழுபேர் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விரைவில் பதவி விலக நேரிடும் என அந்நாட்டின் சுற்றுலாத்துறை துணை மந்திரி அருன்டிக்கா பெர்னாண்டோ சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதனால், கட்சி கட்டுப்பாட்டை மீறிய வகையில் செயல்பட்ட அருன்டிக்கா பெர்னாண்டோவை மந்திரி பதவியில் இருந்து உடனடியாக நீக்கி அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள துறைமுகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சீனாவுக்கு அளித்த அரசின் முடிவை எதிர்த்து போர்க்குரல் எழுப்பிய நீதித்துறை மந்திரி விஜெயதாஸா என்பவர் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

என்னை பதவியில் இருந்து நீக்கியதால் அரசுக்கு எதிராக யாரும் பேச மாட்டார்கள் என யாராவது நினைத்தால் அது தவறாக முடிந்து விடும். மந்திரியாக இல்லாவிட்டாலும் கட்சியில் நான் தொடர்ந்து நீடிப்பேன் என இன்று பதவி நீக்கம் செய்யப்பட்ட அருன்டிக்கா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News