செய்திகள்

அணு ஆயுதங்களை மேலும் அதிகரிப்போம் - வடகொரியா ஊடகம்

Published On 2017-09-09 09:33 GMT   |   Update On 2017-09-09 09:33 GMT
வடகொரியா உருவான தினத்தையொட்டி அந்நாட்டின் ஊடகம் வெளியிட்ட கட்டுரையில் அணுஆயுதங்களை மேலும் அதிகரிப்போம் என குறிப்பிட்டுள்ளது.

பியாங்யாங்:

சர்வதேச ஒப்பந்தங்களை மீறி வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்தி கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை அதிகரித்து வருகிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த எதிர்ப்புகளையும் மீறி சமீபத்தில் வடகொரியா மேலும் ஒரு சக்திவாய்ந்த அணு குண்டினை பூமிக்கு அடியில் பரிசோதித்தாகவும் இதன் விளைவாக 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இது இந்தாண்டு அந்நாடு சோதனை செய்யும் ஆறாவது அணு ஆயுதமாகும். இதற்கு இந்தியா உட்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. சீனாவும் வடகொரியா மீது ஐ.நா.சபை சரியான நடவடிக்கை எடுத்தால் ஆதரிப்போம் என கூறியிருந்தது.

இந்நிலையில், வடகொரியா உருவாகி இன்றுடன் 69 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த தினத்தையொட்டி அந்நாட்டின் அரசு ஊடகம் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் அணுஆயுத பலத்தை அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளது. 

வடகொரியா மீது மோதல் போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் வெவ்வேறு அளவிலும் வெவ்வேறு வடிவத்திலும் அமெரிக்காவிற்கு பரிசு அளிக்கப்படும் எனவும் அந்த பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளது.

‘நாடு உருவாக்கப்பட்ட தினத்தையொட்டி வடகொரியா அணுஆயுத சோதனை நடத்த அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே அந்நாட்டின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருகிறோம். மேலும் வடகொரியாவின் ஆளுங்கட்சி உருவாக்கப்பட்ட தினமான அக்டோபர் 10-ம் தேதியும் அணுஆயுத சோதனை நடத்தப்படலாம்’ என தென்கொரிய ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.



Tags:    

Similar News