செய்திகள்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த சீக்கியரை இந்தியாவுக்கு நாடு கடத்த முடிவு

Published On 2017-08-14 23:44 GMT   |   Update On 2017-08-14 23:44 GMT
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த சீக்கியரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நியூயார்க்:

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களால் உள்நாட்டினருக்கு வேலையிழப்பு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் ஏற்படுவதாக குற்றம் சாட்டியிருந்த ஜனாதிபதி டிரம்ப், இப்படி குடியிருப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். அதன்படி மெக்சிகோவில் இருந்து வந்த ஏராளமானோர் உள்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பல்ஜித் சிங் (வயது 39) என்ற சீக்கியர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் மெக்சிகோ வழியாக அமெரிக்கா சென்றிருந்தார். 2 குழந்தைகளுக்கு தந்தையான அவர் தொடர்ந்து அங்கு தங்கியிருந்ததுடன், அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு இருந்தார்.

ஆனால் எதுவும் பலனளிக்காத நிலையில், அவரை தற்போது இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக ஒருவாரம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பல்ஜித் சிங், 90 நாட்களுக்குள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல்ஜித் சிங்கின் 2 குழந்தைகளும் அமெரிக்க குடிமகன்களாக இருக்கும் நிலையில், பல்ஜித் சிங்குக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு இருப்பது குறித்து அவரது மனைவி கேத் சிங் கவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தில் அனைத்தும் மாறி விட்டதாக அவர் விரக்தியுடன் கூறினார். 
Tags:    

Similar News