செய்திகள்

பாகிஸ்தான் : ஆப்கான் எல்லைப்பகுதியில் குண்டுவெடிப்பு- 3 பேர் பலி

Published On 2017-08-11 12:35 GMT   |   Update On 2017-08-11 12:35 GMT
வடமேற்கு பாகிஸ்தானில் ஆப்கன் எல்லையை ஒட்டிய பஜாவுர் என்னும் பழங்குடியின கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மூன்று பேர் பலியாகி உள்ளனர். மேலும் 26 பேர் காயமடைந்தனர்.

இஸ்லாமாபாத்:

வடமேற்கு பாகிஸ்தானின் ஆப்கன் எல்லைப்பகுதியில் தலிபான் உட்பட சில தீவிரவாத அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர். அதன் பின்னர் ராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக இந்த தாக்குதல் சம்பவங்கள் சமீப காலமாக குறைந்திருந்தன. ஆனால் தற்பொழுது இந்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடக்கியுள்ளனர்.

இந்நிலையில், இப்பகுதியில் அமைந்துள்ள பஜாவுர் மாவட்டத்தின் பழங்குடியின கிராமத்தில் இன்று தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மூன்று பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிரவாதிகள் சாலையோரம் வைத்திருந்த வெடிகுண்டில், தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் சிக்கியது.

அந்த குண்டு வெடித்ததில் அந்த வாகனத்தில் சென்ற மூன்று தொழிலாளர்கள் பலியாகினர் என அந்த பகுதியை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவரது இந்த தகவலை மற்றொரு முக்கிய அரசு அதிகாரியும் உறுதி செய்துள்ளார்.  காயமடைந்த 26 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாவும் அவர் கூறினார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த பகுதியில் தாக்குதல் நடத்திவரும் தலிபான் தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Tags:    

Similar News